படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் துவக்கி வைத்தார்கள்..
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கொடிநாள் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவரும் மற்றும் மாவட்ட முப்படை வீரர் வாரியத்தலைவருமான அரவிந்த் படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூலினை நேற்று துவக்கி வைத்து, முதல் நிதியினை வழங்கினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் இந்தியா முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் அரசு முன்னால் படைவீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி வருகிறது. அதன் அடிப்படையில், நேற்றைய தினம் படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூலினை குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் துவக்கி வைத்தார். கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்களத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பத்தின் பெண்கள், ஊனமுற்ற படைவீரர்கள், முன்னால் படைவீரர்கள் மற்றும் விதவைகளின் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நிதியுதவி வழங்குமாறு, மாவட்ட ஆட்சியர் கேட்டுகொண்டார். கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு கொடிநாள் வசூல் செய்திட அரசால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ.1,14,52,000/- நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.1,20,56,000/- வசூல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் ஒரு கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை புரிந்துள்ளது குமரி மாவட்டம் . தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் போர் நடவடிக்கையின் போது உயிர்நீத்த படைவீரரின் மனைவிக்கு கார்கில் நிவாரண நிதியிலிருந்து கருணை தொகையாக ரூ.20 இலட்சம் வழங்கினார்கள். மேலும், மாண்புமிகு தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் அவர்களின் கொடிநாள் செய்தி மற்றும் கொடிநாள் மலரை மாவட்ட முன்னால் படைவீரர் நல உதவி இயக்குநர் மு.சீனிவாசன் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி அடையாள கொடியும் அணிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், முன்னால் படைவீரர் நல உதவி இயக்குநர் சீனிவாசன், அலுவலக பணியாளர்கள் மற்றும் முன்னால் படைவீரர்கள் கலந்து கொண்டார்கள்.