‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்.

Loading

உலகளாவிய பொது சுகாதார அமைப்புமுறையின் சவால்கள் மற்றும் இடைவெளிகள் பற்றி கொவிட்-19 பெருந்தொற்று நமக்கு எச்சரித்தது. தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளிலும் பெருந்தொற்றின் தாக்கம் எதிரொலித்தது. அப்போதிலிருந்து, அறிவியல் சமூகத்தினர், சுகாதாரப் பணியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சி மற்றும் இடையராத ஒத்துழைப்பினால் நாம் பெருமளவு மீண்டிருக்கிறோம். இருந்த போதும், அதிக பணவீக்க விகிதம் மற்றும் ரஷ்ய- உக்ரைன் மோதல் போன்ற சர்வதேச விஷயங்களால் இந்த மீட்சி தடைபட்டுள்ளது. அதே வேளையில் அரசுகள் மற்றும் பொதுமக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள், வளங்களின் சமமான விநியோகத்திற்கு பாலமாக அமைந்துள்ளன.
நிலைமையை ஆராய்ந்து, இத்தகைய சவால்களின் தீவிரத்தை மதிப்பிட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நமது உறுதிப்பாடுகளை புதுப்பிக்கும் வாய்ப்பை இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் வழங்குகிறது. சமீபத்திய தரவுகளின்படி விரைவான மீட்சியினிடையேயும் உலகளவில் பணியாற்றும் நேரத்தின் எண்ணிக்கை கொவிட் தொற்றுக்கு முந்தைய நிலையை விட 1.5% குறைவாகவே உள்ளது. 40 மில்லியன் முழு நேரப் பணிகளின் பற்றாக்குறைக்கு இது சமமாகும். கூடுதலாக, சர்வதேச தொழிலாளர் சந்தையில் வேறுபாடுகளும் அதிகரித்து வருகின்றன. பிரிவுகளிடையே அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுக்கு இது நேரடிக் காரணியாக அமைவதோடு, ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவுகள் ஏழ்மை அடைந்து மேலும் பிற்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அனைத்து பங்குதாரர்களுக்கும் செயல்பாடுகள் சார்ந்த இலக்குகளை அளிக்கும் வாய்ப்பை ஜி20 வழங்குகிறது.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் விஷயங்களில் தீவிரமாக பணியாற்றுவதற்கும், பல்வேறு துறைகளில் நெகிழ்தன்மையை கட்டமைக்கவும் ஜி20 அமைப்பு சரியான தருணத்தில் கூடுகிறது. தொழிலாளர்கள் சம்பந்தமான சர்வதேச விஷயங்கள் மற்றும் சமூக தொழிலாளர் இயக்கங்கள் குறித்து அனைத்து வணிக சங்கங்களும் ஆலோசித்து தீர்வு காணும் மன்றமாக எல்- 20 விளங்கும்.
உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் சமுதாய நலனை அதிகரிக்கும் விஷயத்திலும் எல்-20 கவனம் செலுத்தும். முதலாவது தொழில் புரட்சியின் பின்னணியில் உதயமாகி, இரண்டாவது தொழில் புரட்சியின்போது முதிர்ச்சி அடைந்த சமூகப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு விதிகளை நான்காவது தொழில்புரட்சி யுகத்தில் மீண்டும் புனரமைப்பது அவசியமாகிறது.
இந்த விஷயங்கள் பற்றி ஜி20 அமைப்பின் பல்வேறு பணி மற்றும் ஈடுபாட்டுக் குழுக்கள் ஆலோசனை நடத்தியுள்ளன. இந்தோனேசியாவின் பாலியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜி20 தலைவர்களின் பிரகடனங்கள் உட்பட பல்வேறு ஆவணங்களில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. கொவிட்- 19 பெருந்தொற்றிலிருந்து மீளும் முறைகளை ஊக்குவிக்கும் ஒட்டுமொத்த உத்திகள் குறித்து ஆலோசிக்கும் நோக்கத்தோடு எல்- 20 அமைப்பின் பிரதிநிதிகளின் சந்திப்பு நடைபெறும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் இடர்பாடுகள் இடையே தொழிலாளர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும்.
‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கிணங்க சமத்துவம், சமூக நீதி ஆகிய கோட்பாடுகளால் வழிநடத்தப்பட்டு, தொழிலாளர் நலனின் முன்னேற்றத்தை நோக்கிய உறுதிபாட்டிற்கு வலு சேர்ப்பதுதான் எல்-20 போன்ற ஈடுபாட்டுக் குழுக்கள் மற்றும் ஜி20 அமைப்பிற்கு இடையேயான ஒருமித்த கருத்தாக அமைந்துள்ளது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *