மழை நீர் கால்வாய் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்

Loading

திருவள்ளூர் டிச 03 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த வெங்கத்தூர் ஊராட்சியில் 15-வது மத்திய நிதிக்குழு மான்யத்தின்படி  23 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது.இந்நிலையில் வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகர் அடுத்த கே.கே.நகர் குடிசைப் பகுதியில் 265 மீட்டர் தூரத்திற்கு 8 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி 90 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் ஊராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கூவம் ஆற்றங்கரையோரத்தில் உள்ள வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்துடன் இணைத்து இந்த கால்வாயை கட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி திருவள்ளூர் நகர திமுக செயலாளரும், திருவள்ளூர் நகர்மன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன் மின்கம்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயை மர்ம நபர்களை கொண்டு உடைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டதற்கு தரக்குறைவான வார்த்தைகளால் திமுக பிரமுகர் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரும், பாமகவைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினருமான பாலா என்கிற பாலயோகி தலைமையில், கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர்  வெங்கடேசன் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டு திருவள்ளூர் – பூவிருந்தவல்லி சாலையில் மழை நீர் கால்வாயை உடைத்து சேதப்படுத்திய திமுக நகர செயலாளரும்,திருவள்ளூர் நகர்மன்றத்துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  அதனையடுத்து, கால்வாயை சேதப்படுத்திய பகுதியில் நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி மற்றும் திருவள்ளூர் நகர திமுக செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் வந்திருப்பதாக வந்த தகவலையடுத்து அவரை கைது செய்ய வலியுறுத்தினர்.
இதனால் பதற்றத்தை தவிர்க்க நகராட்சி ஆணையர் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் திமுக நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரனும் சென்றுவிட்டார்.  இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  மத்திய அரசின் திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் கழிவு நீர் கால்வாயை சேதப்படுத்திய திமுக பிரமுகரை நேரில் பார்த்தும் கைது செய்யாததால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்தனர்.  விசாரணைக்குப் பிறகு குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *