நயன்தாரா படம் நிறுத்தம்.
நயன்தாரா நடித்துள்ள ‘கோல்டு’ என்ற திரைப்படம் தணிக்கையாவதில் தாமதம் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் கடைசி நேரத்தில் படம் வெளியாவது நிறுத்தப்பட்டது.
நிவின் பாலி, நஸ்ரியா நடித்த ‘நேரம்’ படம் மூலம் டைரக்டராக அறிமுகமான அல்போன்ஸ் புத்திரன் தொடர்ந்து பிரேமம் வெற்றி படத்தை இயக்கி மேலும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம்தான் சாய்பல்லவி நடிகையாக அறிமுகமானார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கோல்டு’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் பிருதிவிராஜ் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளனர். கோல்டு படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால் வரவில்லை. இந்த நிலையில் கோல்டு படம் நேற்று தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் வெளியாகும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். ரசிகர்களும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டினார்கள். தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் ரசிகர்கள் கோல்டு படத்துக்கு டிக்கெட் முன் பதிவும் செய்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ‘கோல்டு’ படம் வெளியாவது நிறுத்தப்பட்டது. தணிக்கையாவதில் தாமதம் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் திட்டமிட்டபடி கோல்டு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணம் ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது.