சர்க்கரை ஆலையில் பணிகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார் :

Loading

திருவள்ளூர் நவ 30 : திருவள்ளூர் மாவட்டம், திருவேலங்காடு ஊராட்சி ஒன்றியம், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-2023-ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2.25 இலட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பு அரவைப் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கரும்பு அரவைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் துவக்கி வைத்து பார்வையிட்டு,
பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் ஆண்டு நடவுப்பருவத்தில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்த 9887 ஏக்கரில் 8236 ஏக்கர் கரும்பினை திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்கு 2869 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். கரும்பு உற்பத்தி சுமார் 2.40 இலட்சம் மெட்ரிக் டன்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-2023-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு தமிழக அரசினால் 2.25 இலட்சம் மெட்ரிக் டன்கள் அரவை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் கரும்பு அரவைக்கான இலக்கை விட 37,702 மெட்ரிக் டன்கள் கூடுதலாகும். கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, 2021-22-ம் ஆண்டு அரவை பருவத்தில் வழங்கப்பட்ட 1,75,000 மெ.டன் இலக்கினை விட 1,87,298 மெ.டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டு கூடுதலாக 12,298 மெ.டன் அரவை செய்து சாதனை அடையப்பட்டுள்ளது. மேலும், சர்க்கரை கட்டுமானம் 8.15 சதவிகிதம் பெறப்பட்டது.
இந்நிலையில் 2022-23 கரும்பு அரவைப்பருவத்திற்கு விவசாயிகள் பதிவு செய்துள்ள கரும்புகளின் அரவைப்பணி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நடப்பு அரவைப்பருவத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1900 மெ.டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும். நடப்பு அரவைப்பருவத்தில் 8.75 சதவிகிதம் சர்க்கரை கட்டுமானம் பெறுவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வரும் நிலையில் ஏக்கருக்கு சராசரி மகசூல் 40-45 மெட்ரிக் டன்கள்; வீதம் கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் ரூ.28.82 கோடி கரும்பு கிரையத் தொகை வழிவகை கடன் பெற்று நிலுவையின்றி; கரும்பு சப்ளை செய்த 1620 விவசாயிகளுக்கும் அவரவர் வங்கி கணக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வரவு வைக்கப்பட்டுள்ளது மேலும், சிறப்பு ஊக்கத் தொகைக்கு தமிழக அரசாணை பெறப்பட்டுள்ள நிலையில் டன் ஒன்றிற்கு ரூ.195 வீதம் ரூ.3.56 கோடி விரைவில் வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு நடப்பு ஆண்டிற்கான கரும்பு கிரயத் தொகையாக ஒரு டன்னுக்கு ரூ.2821.25 வழங்கவுள்ளது. இது கடந்த ஆண்டிiனை விட ரூ.66.25 அதிகமாகும்.
நடப்பாண்டிலும் ஆலை அரவைக்கு கரும்பு விநியோகிக்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் கரும்பு கிரையத்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, திருத்தணி சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மலர்விழி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *