மக்கள் குறை தீர்க்கும் நாள்

Loading

திருவள்ளூர் நவ 30 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 72 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 44 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 44 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 86 மனுக்களும் என மொத்தம் 278 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நண்பர்கள் நலச்சங்கம் சார்பாக சேமிக்கப்பட்ட நிதியிலிருந்து அச்சங்கத்தின் 12 உறுப்பினர்களுக்கு தொழில் அபிவிருத்தி கடனாக தலா ரூ.25,000 வீதம் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் வட்டியில்லா கடன் தொகைகளையும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக சென்னையில் வருகின்ற டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4 வரை மாநில அளவில் காதுகேளாதோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, அவ்விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கடம்பத்தூர் லைன்ஸ் கிளப் சார்பாக தயாரிக்கப்பட்ட டி-சர்ட்டுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் பி.ப.மதுசூதணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, கடம்பத்தூர் லைன்ஸ் கிளப் நிர்வாகி ஆர்.சேகர், லைன்ஸ் கிளப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *