மழைக்கால பாதிப்புகளும்… பாதுகாப்பு விழிப்புணர்வும்
மழைக்கால பாதிப்புகளும்… பாதுகாப்பு விழிப்புணர்வும்!
அறிவியலறிஞர் டாக்டர்.இ.கே.தி.சிவகுமார்
(உறுப்பினர், பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான சுற்றுச் சூழல் அறிவியல், புதுதில்லி)
மனித சமுதாயம் அறிவார்ந்த சிந்தனை வாயிலாக விழிப்புணர்வு பெறுவது காலத்தின் அவசியம்.
குறிப்பாக கால நிலை மாற்றத்தால் எற்படும் நிகழ்வுகள், பாதிப்புகள், பாதுகாப்பு வழிமுறைகள், கடமையுணர்வு
குறித்து ஒவ்வொருவரும் அறிவது மிக மிக அவசியம்.
மழைக் காலங்களில் குறிப்பாக நாம் வடக்கிழக்கு மற்றும் தென் மேற்கு பருவக் காலங்களில் மழையினை
பெறுகின்றோம். மேலும் கடலின் மேற்பரப்பில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் மழைக்குக்
காரணங்கள் ஆகின்றன. குறிப்பாக தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவக் காற்றால்
பருவமழை துவங்குவது இயல்பு. இருப்பினும் உலகிலுள்ள பெரும்பாலான நகரங்களில், குறிப்பாக இந்திய
நகங்களில், பருவ நிலையைக் கணிப்பது மற்றும் கண்காணிப்பது தொடர்ந்து சவாலாகிக் கொண்டே வருகிறது
என்பது கசப்பான உண்மை.
தென்னிந்திய நகரங்களில் மழைப்பொழிவு ஒழுங்கற்றதாகவும், பல நாள் பெற வேண்டிய மழை அளவு
ஒரே நாளில் பெய்து பெரும் பாதிப்புகளை உருவாக்கி விடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் காலநிலையில்
ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சூழல் பாதிப்புகள்.
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை கடல்மட்டத்தில் இருந்து தாழ்வான
சமவெளியில் அமைந்துள்ளதாகவும், நிலவியல் ரீதியாக பேரிடர்களுக்கு எளிதில் பாதிக்கக்கூடிய வகையில்
அமைந்துள்ளதாகவும், இதன் காரணமாக பேரிடர் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய நிலையும் உள்ளதாகவும்
ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலகளவில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய நகரங்களில் 56 சதவீதம் பேர்
சூறாவளி, வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களில் ஏதேனும்
ஒன்றால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
பெரு மழையால் ஏற்படும் சமூக பொருளாதார பாதிப்புகள், உயிரனங்களின் இழப்பு, நிலச்சரிவுகள்,
செய்தி தொடர்பு, வாகனப் போக்குவரத்து, சாலைகள் பாதிப்பு, மனித வாழ்வை சீரழிக்கும் பல்வேறு
நிகழ்வுகள் எண்ணிலடங்கா. இதனை காலம் பலமுறை உணர்த்திட்டாலும் அறிவு மற்றும் தொழில்நுட்பம்
மேம்பட்ட நிலையில் இன்னும் பாதுகாப்பு வழிமுறைகளும் பாதிப்புகளை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளும்,
விழிப்புணர்வும் மனித சமுதாயம் முழுமையாக பெறவில்லையே என்ற நிலை, பாதிப்புகள், உயிரிழப்புகள்
வாயிலாக அறிய முடிகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையும், தவிர்க்கும் வழி காட்டு நெறிமுறைகளும்
அவசியம் பின்பற்ற வேண்டும்.
குறிப்பிட்ட இடங்களில் மழைக்கால பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து குறைக்கும் நடவடிக்கைகளை
அறிவதன் மூலம் உயிரின பாதிப்புகள், பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை குறைக்க முடியும்.
அரசும், அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்புகளும் பல்வேறு வகைகளில் பேரிடர் காலங்களில்
உதவினாலும், தனிமனித கடமையும் விழிப்புணர்வும் காலத்தின் அவசியம் அவசரம். குறிப்பாக அரசு மற்றும்
சென்னை மாநகராட்சியின் மழைக்காலப் பணிகள், செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியது.
நாம் பெருமழை மற்றும் வெள்ளத்தின் போது பயணங்களை தவிர்ப்பது, ஆபத்தை உணர்ந்து பாதுகாப்பு
வழிமுறைகளை பின்பற்றுவது, அறுந்த மின்கம்பிகள் வாயிலாக மின் கசிவுகள் ஏற்படும் நிலை உருவாகலாம்
இதனை பொருட்படுத்தாமல் இருக்கும் அலட்சியபோக்கால் உயிர் பாதிக்கும் நிலை ஏற்படலாம். மேலும்
தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறுவது அவசியம். குடிநீர், உணவு, உடல் நலபாதுகாப்பின் அவசியத்தை
உணர்ந்து முக்கிய கவனம் மேற்கொள்ள வேண்டும். ஆறு, ஏரி பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
வளரும் நகரங்களில் மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப திட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழி முறைகளை
தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து செயல்படுத்துவது, வரும் முன் காப்பது என்ற வகையில் அமையும்
என்பது நிச்சயம். அதுவே அறிவுடமையாகும். அறிவார்ந்த செயல்பாடுகள் மட்டுமே பல வகையான
பாதிப்புகளை குறைக்கவும் தவிர்க்கவும் முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மழை நீரை சேமிப்போம்!
மழை வெள்ள பாதிப்புகளை தடுப்போம்! தவிர்ப்போம்