திருவள்ளூர் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் நவ 09 :
திருவள்ளூர் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு வரும் 14.11.2022 அன்று பள்ளி,கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவ,மாணவிகள் அனைவருக்கும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் கல்லூரி,பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000,, மூன்றாம் பரிசு ரூ.2000 பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும். அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை ரூ.2000 பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப் போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேர் வீதம் தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.
6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாயிலாகச் சுற்றறிக்கை அனுப்பி முதற் கட்டமாகப் பள்ளிகளிலேயே பேச்சுப்போட்டிகள் நடத்தி 60 மாணவர்கள் மட்டும் தெரிவு செய்து அனுப்பி வைத்தல் வேண்டும். போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் வரும் 14.11.2022 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கு 2 இல் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்கள் அன்று காலை 9.15 மணிக்கும் கல்லூரி மாணவர்கள் பிற்பகல் 1.30 மணிக்கும் தங்களின் வருகையை உறுதி செய்திடுதல் வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி,கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.