கோவா சர்வதேச திரைப்பட விழா ஏற்பாடுகள்: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆய்வு

Loading

இம்மாதம் 20 முதல் 28-ந் தேதி வரை கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆயத்தப் பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச திரைப்படங்களுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்கும், திரைப்படக் கலையின் சிறப்பை முன்வைப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் ஏதுவாக கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய இந்த நிகழ்வுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். கோவா மாநிலத்திற்கே உரிய மகிழ்வையும், கொண்டாட்ட உணர்வையும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஊடுபரவலாக ஏற்படுத்தும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா, இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தரும் பங்கேற்பாளர்கள் மற்றும் திரைக்கலை முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கும் தங்கள் வருகை உவகை அளிப்பதாக அமையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் எவ்விதமான குறைவுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

இந்த திரைப்பட விழாவிற்கான இணையப்பக்கம் மற்றும் கைபேசி செயலி ஆகியவற்றை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அவர் தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக பங்கேற்பாளர்கள் திரைப்பட விழாவின் மிகச் சிறந்த அனுபவத்தை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

தேசிய திரைப்பட அபிவிருத்திக் கழக நிர்வாக இயக்குனர் ரவீந்திர பாக்கர், இம்முறை இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவிலான திரைக்கலை வல்லுனர்கள் திரைப்பட விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறினார்.

முன்னதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடக்க நிகழ்விற்கு முன்னதாகவே திரைப்பட விழாவின் அனைத்து நிகழ்வுகளும் செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *