வாகன சர்வீஸ் செண்டரில் நள்ளிரவு புகுந்து பொருட்களை அடித்து உடைத்த முகமூடி அணிந்த மர்ம கும்பல்….. 2 லட்சம் பணத்தை திருடியும் கைவரிசை….போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆளூரை சேர்ந்தவர் பிஜு. இவர் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவில் பால்பண்ணை அருகே வாகனங்கள் பழுது மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த சர்வீஸ் சென்டர் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கிளின்ஸ்டன் என்பவரது கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது. இந்த நிலையில் ஒப்பந்தம் முடியும் முன் கடையின் உரிமையாளர் கிளின்ஸ்டன் பிஜு விடம் சர்வீஸ் சென்டரை காலி செய்ய கூறியுள்ளார்.
இதற்கு பிஜு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் 50 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், ஒப்பந்தம் முடிவதற்குள் காலி செய்ய முடியாது என கூறியுள்ளார். ஆனால் கடை உரிமையாளர் பிஜுவை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில். பிஜு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் கடை உரிமையாளர் கிளின்ஸ்டன் தூண்டுதலில் நேற்று இரவு 2 வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த 10 க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் பிஜு வின் சர்வீஸ் சென்டரின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியதுடன் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
மேலும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். தொடர்ச்சியாக அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.இது குறித்து பிஜு நேசமணிநகர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முகமூடி கும்பலை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….