வாரிசு பட முதல் பாடல் வெளியானது
விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியானது.
தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.
வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், பாடல் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் மாலை 6.30 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ படக்குழுவால் வெளியிடப்பட்டது. மொத்தம் 30 விநாடி அளவில் இந்த ப்ரோமோ பாடல் வெளியாகி இருந்தது. ‘ரஞ்சிதமே’ தொடங்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருக்கிறார்.
இந்நிலையில் இதன் முழு பாடலும் நேற்று முன்தினம் மாலை இணையதளத்தில் வெளியானது. இதில் விஜய்யுடன் ராஷ்மிகா நடித்துள்ளார். அந்த காட்சிகளும் பாடலுக்காக வெளியிடப்பட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ளது. படத்தின் மற்றொரு பாடலும் இம்மாதம் வெளியாக உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.