திருவள்ளூர் அருகே ஏரி மதகு சேதமடைந்து ஏரி நீர் வீணாகி விவசாய நிலத்தில் தேங்குவதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு : மாவட்ட நிர்வாகம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
திருவள்ளூர் நவ 07 :
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை ஊராட்சியில் அமைந்துள்ளது அம்பாள் ஏரி. பொதுப்பணித்துறையின் கீழ் வரும் இந்த ஏரி 94 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நீர் வாயிலாக பாகசாலையில் 265 ஏக்கரில் மூன்று போகம் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஏரியின் மூன்று மதகுகளில் இரண்டு மதகுகள் சேதமடைந்து உள்ளன. இதனால் மழை பெய்தாலும் ஏரியில் நீர் நிரம்பாமல் வீணாக வெளியேறுகிறது. மேலும் மதகு வழியாக நீர் வெளியேறுவதால் ஏரியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தில் நீர் தேங்குவதால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே விவசாயிகளின் நலன் கருதி ஏரியின் மதகு நீர்வரத்து கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று அண்டாத்தூர் மற்றும் உரியூர் ஏரியில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய் தூர்ந்து போய் உள்ளதால் ஏரிக்கு கிடைக்க வேண்டிய உபரி நீர் கிடைப்பதில்லை. இதனால் நெல் அறுவடையின் போது நெல் கருத்துப்போவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.