எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு விழா
எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்காக நடைபெற்று வருகிறது.
இதன் தொடக்கவிழாவில் சாகித்திய அகாதெமியின் பொறுப்பு அலுவலர் சந்திரசேகர ராஜூ அனைவரையும் வரவேற்று, சாகித்திய அகாதெமியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
சிறப்புரை ஆற்றிய கல்லூரியின் தாளாளர் போனிபஸ் ஜெயராஜ் சாகித்திய அகாதெமி கொரோனா காலத்திலும் இணைய வழியில் நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழை வளர்ப்பதில் முக்கிய அமைப்பாக இருந்து வருகிறது. அகிலனின் பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் கருத்தரங்காக அமையும். தமிழக அரசு 100 இளம் பத்திரிக்கையாளர்களை லயோலா கல்லூரியில் உருவாக்க பொருளுதவி செய்துள்ளது என்று கூறினார்.
அறிமுக உரை ஆற்றிய பாரதிபாலன், அகிலன் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பி, பாரதியார் பாடல்கள் தடை செய்யப்படடிருந்த காலத்தில் துணிந்து பாட முயற்சி செய்தார். பள்ளிப் பருவத்தில் ‘அவன் ஏழை’ என்ற தலைப்பில் ஒரு சிறுவனின் ஏக்க உணர்வைக் குறித்த தன் முதல் கதையை எழுதினார். காந்தி மீது கொண்ட பற்றால் கதர் உடுத்தித் திருமணம் செய்தவர் அகிலன் என்று கூறினார். தொடக்கவுரை நிகழ்த்திய திலகவதி IPS, ஞானபீடம் பெற்று முதல் எழுத்தாளர் அகிலன் என்றும், எழுத்தும் வாழ்க்கையும் என்ற அவர் சுயசரிதை அவரைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள உதவும் என்றும் கூறினார். தலைமை உரை ஆற்றிய பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி தான் 1952 இல் வெளிவந்த சிநேகிதி என்ற பின் நவீனத்துவ நாவலைக் குறித்துப் பேசினார். வாழ்வுக்காகத்தான் கலை, அன்பு காட்டுவதே கலைஞனின் நோக்கம் என்பதே அகிலனின் சித்தாந்தம் என்றும் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
வாழ்த்துரை வழங்கிய அகிலனின் மகன் அகிலன் கண்ணன் தன் தந்தை ICS படிக்க வேண்டும் என்று தன் தாத்தா விரும்பியதாகவும் அது நடைபெறவில்லை என்றும், பல்கலைக்கழகங்களில் நவீன இலக்கியங்களை கொண்டு செல்ல குரல் கொடுத்தவர் தனது தந்தை என்றும் கூறினார். இறுதியாக தமிழ்த் துறைத் தலைவர் அமல்ராஜ் நன்றி கூறினார்.