திருவள்ளூரில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

Loading

திருவள்ளூர் நவ 04 :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி விவசாயிகளோடு கலந்துரையாடி, கோரிக்கைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பேசினார்.

அப்போது திருவள்ளுர் மாவட்டத்தில் சொர்ணவாரி 2022 கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 52 இடங்களிலும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் 4 இடங்களிலும் ஆக மொத்தம் 56 இடங்களில் அரசு கட்டிடங்களில் மட்டுமே நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு பதிவு செய்த 4331 விவசாயிகளிடமிருந்து 31723.08 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அனைத்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த 4199 விவசாயிகளுக்கு ரூ.66.38 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 132 விவசாயிகளுக்கும் இன்றைய தினத்திலே நெல் விற்பனைக்கான தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் கடந்த 2021-2022-ம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்ட 680 வருவாய் கிராமங்களில் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்த 42,054 விவசாயிகளில் 327 கிராமங்களை சேர்ந்த 19,033 விவசாயிகளுக்கு ரூ.23.24 கோடி இழப்பீடுத் தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.திருவள்ளுர் மாவட்டத்தில் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்; 141 கிராம பஞ்சாயத்துக்கள் தெரிவு செய்யப்பட்டு 6 தரிசு நிலத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் அனைவருக்கும் அனைத்து கடன் உதவிகளும் கிடைக்கும் வகையில் வங்கிகளின் மூலம்; லோன் மேளா நடத்த திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இவ்வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .

கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல மாதங்களாக நிலுவையில் இருந்த நிர்வாக குழு கூட்டம் மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற்சியால் மிக சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்தும் நடப்பாண்டிற்கான கரும்பு அரவையை விரைவில் துவக்குவதற்கும் முடிவான வாகன வாடகையை நிர்ணயித்து வழங்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொழில் துவங்க வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் துவக்க நிதியாக ரூ.10 இலட்சமும், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறுகீரை விதைகள் மற்றும் இடுபொருட்கள் தொகுப்பு ரூ.10 ஆயிரம் வீதம் 2 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) .எல்.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  வி.எபினேசன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்  சமுத்திரம், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply