திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் நாகர்கோவிலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் :- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தி இருக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஹிந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் இந்த எதிர்ப்புக்கு பாஜகவினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.
இதற்க்கு கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரும்போது எல்லாம், ஹிந்தி திணிப்பு என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளும் என்றும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே திமுக ஹிந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், திமுகவை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முத்துராமன் மற்றும் சகாயம் ( ஐயப்பன் ) உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்…