தூத்துக்குடி அனல்மின் நிலைய ஊழியர்கள் ஸ்ட்ரைக்: பணி நிரந்தரம் செய்யக்கோரி தர்ணா!!
புதன் 26, அக்டோபர் 2022 10:44:58 AM (IST)
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன்மேன், உதவியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 18ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியின் போது உயிரிழக்கும் ஊழியர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு குழு மாவட்டத் தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.