திருவள்ளூரில் உள்ள ராகவேந்திரர் கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது : தங்க, வெள்ளி நகைகள், பஞ்சலோக சிலை, பணம் பறிமுதல்
திருவள்ளூர் அக் 27 :
திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான வீரராகவர் கோயில் குளம் அருகில் தெற்கு குளக்கரை தெருவில் அமைந்துள்ளது ராகவேந்திரர் கோயில். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் கடந்த 2001-ம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 20-ந் இரவு 8.45 மணிக்கு வழக்கம் போல் அர்ச்சகர் ராகவேந்திரன் என்பவர் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் 21-ந் தேதி காலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருக்கும் பொருட்கள் சிதறிக் கிடப்பதாக அர்ச்சகர் ராகவேந்திரனுக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து வந்து பார்த்துள்ளார்.
அப்போது வெள்ளி கவசம், வெள்ளி கோமுக தட்டு, கலச சொம்பு, பஞ்சபாத்திரம், வெள்ளி ஆரத்தி தட்டு, வெள்ளி நாணயம், அகல், தீபம், உள்ளிட்ட 18 கிலோ வெள்ளிப் பொருட்களும், 5 கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலை மற்றும் 63 கிராம் தங்கம் மற்றும் 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து கோயில் அர்ச்சகர் ராகவேந்திரன், திருவள்ளூர் டவுன் போலிசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
மேலும் சிசிடிவியில் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கை உடைத்து கீழே போட்டிருந்ததை எடுத்து சரி செய்து, அதில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் திருவள்ளூர் வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் சூர்யா (22) மற்றும் காக்களூர் பகுதியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் கார்த்திக் (25) ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.சூர்யா ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து திருவள்ளூர் தேரடி பகுதியில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சூர்யா, கார்த்திக் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ராகவேந்திரர் கோயிலில் கொள்ளையடித்த பஞ்சலோக சிலை, தங்க, வெள்ளி நகைகள், பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் சூர்யா, கார்த்திக் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.