சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல்
சனி மகா பிரதோஷத்தையொட்டி, பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழனி முருகன் கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.
பின்னர் பால், பழம், பன்னீர் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பழனி மதனபுரம் அண்ணாமலை-உண்ணாமுலை நாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் பெரியாவுடையார் கோவில், அடிவாரம் பெரியாண்டவர் கோவில், பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி என அனைத்து சிவன் கோவில்களிலும் மகா பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ஜோதிலிங்கேஸ்வரருக்கு பஞ்சாமிர்தம், தயிர், பால், தேன் இள நீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் அய்யப்பன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன்கோவில், அய்யம்பாளையம் முருகன் கோவில் மலைஅடிவார அண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.