திருவள்ளூர் அருகே டிப்பர் லாரியில் கொண்டு வந்த மண்ணை கொட்டும் போது மேலே சென்ற உயர் அழுத்த மின்சார ஒயர் உரசியதில் லாரியில் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த பரிதாபம்
திருவள்ளூர் அக் 21 : திருவள்ளூர் மாவட்டம் நாராயணபுரம் பகுதியில் கோபி என்பவரிடம் கடந்த நான்கு வருடங்களாக அதேபகுதியை சேர்ந்த தசரதன் என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தசரதன் வீட்டின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து வேலூர் அரசு மணல் குவாரியில் இருந்து அவரது வீட்டு வேலைக்காக மணல் ஏற்றிக்கொண்டு வீட்டு அருகே கொட்டுவதற்காக லாரியை இயக்கி டிப்பரை மேலே தூக்கி உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மேலே இருந்த உயர் அழுத்த மின்சார ஒயர் டிப்பர் லாரியின் மீது உரசியதில் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த ஓட்டுநர் தசரதன் மின்சாரம் பாய்ந்து துடி துடித்து உயிரிழந்தார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் இறந்த தசரதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனது சொந்த வீட்டிற்கு மணல் கொட்டிக் கொண்டிருந்தபோது மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.