கார்த்தியுடன் முதல் முறையாக கைகோர்த்த டைரக்டர் மித்ரன்
‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய வித்தியாசமான கதைக் களங்களுக்கு பிறகு டைரக்டர் பி.எஸ்.மித்ரன் கார்த்தியுடன் `சர்தார்’ படத்துக்காக, முதல் முறையாக கை கோர்த்திருக்கிறார். இவர் சொல்கிறார்: “பெர்சிய மொழியில், ‘சர்தார்’ என்பதற்கு ‘படைத்தலைவன்’ என்று பொருள். ‘சர்தார்’ ஒரு துப்பறியும் திகில் கதை.
உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடக்கிறதுதான். ஆனால் நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்கிறார்கள். உளவு என்பது நாட்டின் ராணுவ ரகசியம் தெரிந்து கொள்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம்.
ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப்பெரிய இடம் நோக்கி உளவு போகுது. இதில் உலக அரசியலும் இருக்குது. அது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதை இது. கார்த்தி, ‘சிறுத்தை’யில் விரைப்பும், ஜாலியாக இரண்டு கதாபாத்திரங்களில் வந்தார்.
இதில் ஜாலியான போலீஸ்காரன். அலப்பறையாக இருக்கும். வயதான அப்பாவாக கார்த்தி கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.
மூன்று மணிநேர மேக்கப்.. அந்த மேக்கப் போட்டு வசனம் பேசி நடிக்கவே கஷ்டம். இதில் கூடவே சண்டை காட்சி வேறு இருக்கும். அது ரொம்பவே கஷ்டம். இப்படி மெனக்கிட்டு கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி. ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் ஆகிய இரண்டு பேருக்கும் முக்கிய கதாபாத்திரம். மற்றொரு முக்கிய கேரக்டரில் லைலா நடிச்சிருக்காங்க. கார்த்தியின் படங்களிலேயே பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் எஸ்.லட்சுமண்குமார். வரும் தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும்”.