தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகக் கல்விக்கொள்கை – கிழக்கு மண்டல கருத்துக்கேட்புக் கூட்டம்
புதுக்கோட்டை 25:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தமிழக கல்விக் கொள்கைக்கான பரிந்துரை கூட்டம் கிழக்கு மண்டல அளவிலான கூட்டம் 25.9.22 காலை 10.00மணிக்கு புதுக்கோட்டை அறிவியல் இயக்க அலுவலகத்தில் மாநிலப்பொருளாளர் ஆர்.ஜீவானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் திருமிகு எம்.வீரமுத்து அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாநிலச்செயலாளர் திருமிகு எஸ்.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் கல்விக்கொள்கைக்கான வரைவறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று அறிமுகவுரையாற்றினார்.
புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டச் செயலாளர்கள் தமிழக கல்விக்கொள்கை குறித்து மாவட்ட அளவிலான அறிக்கையை முன்வைத்தனர். 7 மாவட்டங்களில் இருந்து 30 பேர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் திருமிகு எல்.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலரும், கிழக்கு மண்டலப்பொறுப்பாளருமான எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் அவர்கள் நிறைவுரையாற்றினார். இறுதியாக புதுக்கோட்டை மாவட்டச்செயலாளர் திருமிகு எம்.முத்துக்க்குமார் அவர்கள் நன்றி கூறினார்.
கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் :-
தமிழக அரசு தமிழகத்திற்கான கல்விக்கொள்கையை வகுப்பதற்க்கான அறிவிப்பும், அதற்கான முயற்சியாக கல்வியாளர்கள் கொண்ட குழு அமைத்ததற்கும் தமிழ்நாடு அறிவியல் வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது. அதே நேரத்தில் மாநில அளவிலான கல்விக்குழு அவசராவசரமாக கருத்துக்கேட்பதையும், தமிழகக் கல்விக்கொள்கை குறித்து எந்தவொரு முன்வரைவறிக்கை இன்றி கருத்துக் கேட்பதும் முறையானது அல்ல என்பதையும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
தமிழக கல்விக்கொள்கை மாநில அரசுகளின் சுயசார்பை பாதுகாக்கும் வகையில் நீடித்த நிலைத்த தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட வேண்டும். தேசிய கல்விக்கொள்கையின் பாதகமான அம்சங்கள் எந்த வகையிலும் தமிழகக் கல்விக்கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும்.
தமிழக கல்விக்கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கருத்துக்கேட்புக் கூட்டத்தை 40 மாவட்டங்களிலும் நடத்தி, மண்டல, மாநில அளவில் தொகுக்கப்பட்டு தமிழக அரசுக்கு கோரிக்கையாக வழங்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் அறிவியல் இயக்கப்பொறுப்பாளர்கள் அ.ராமர், அ.மணவாளன், க.சதாசிவம்,ஹேமதலதா, ஞானசேகரன், பொன்முடி, பறவையியல் ஆராய்ச்சியாளர் கிருபாநந்தினி,அய்யனார், சாமி கிருஷ்,சிவானந்தம் அ.ரகமதுல்லா, மஸ்தான், ஜெயபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.