மும்பை தமிழ்ப் பெண்ணாக நடித்த சித்தி இட்னானி
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம், ‘வெந்து தணிந்தது காடு’. இன்று வெளியாகும் இந்தப் படத்தில் மும்பையை சேர்ந்த சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:
தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில், சசி இயக்கியுள்ள ‘நூறு கோடி வானவில்’ படத்தில் நடித்துள்ளேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அதன் படப்பிடிப்பு நேரத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு கதாநாயகியை தேடிக் கொண்டிருந்தார். என் மேலாளர் மூலம் அவரையும் சிம்புவையும் சந்தித்தேன். ஒரு நீல வண்ண சேலையை கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். சில காட்சிகளை இயக்குநர் படம் படித்தார். டெஸ்ட் ஷூட் என்று நினைத்து, ‘சார், சரியாக நடித்திருக்கிறேனா? இந்தப் படத்தில் இருக்கிறேனா?’ என்று இயக்குநரிடம் கேட்டேன்.
‘இதென்ன கேள்வி, உன்னை வைத்து ஒரு காட்சியையே எடுத்துவிட்டேன்’ என்றார் கவுதம் சார். எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் படத்தில் கதாநாயகிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்தில் பாவை என்ற மும்பை தமிழ்ப் பெண்ணாக நடித்திருக்கிறேன். கவுதம் மேனன் பட நாயகிகள் பிசியான நடிகைகளாக மாறி இருக்கிறார்கள். நானும் அப்படி ஆவேன் என்று நம்புகிறேன். சிம்பு ஒரே டேக்கில் காட்சியை ஓகே செய்துவிடுவார். அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நானே டப்பிங் பேசியுள்ளேன். இவ்வாறு சித்தி இட்னானி கூறினார்.