மாமன்ற கூட்டத்திற்கு மிக்சர், டீ சாப்பிட வரவில்லை பாஜக கவுன்சிலர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் காட்டம்.
மாமன்ற கூட்டத்திற்கு மிக்சர், டீ சாப்பிட வரவில்லை குறைகளை தெரிவிக்கவே வந்தேன் என ஒட்டு போட்ட சட்டை அணிந்து பாஜக கவுன்சிலர் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் நாகராஜன், ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது பகுதிகளில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து மேயரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மதுரை மாநகராட்சி 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் (பிஜேபி) பூமா ஜனா ஸ்ரீ முருகன் அவருடைய பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை என்றும் பல நாட்களாக குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. மேலும் எங்கள் பகுதியில் குடிநீரேற்றும் 25 மின் மோட்டார்களை காணவில்லை என புகார் செய்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் குறித்து மேயர் கவனத்திற்கு தெரிவித்தபோது அதற்கு மேயர் விளக்கமளிக்கவில்லை. மேயரின் அலட்சியத்தை கண்டித்து மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து பதாதைகள் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தார். இதனால் சிறிது நேரம் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,
எங்களது பகுதியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதிகளை வேண்டும் என்று மேயர் மற்றும் அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர். மக்களின் பிரச்சினைகளை பேசவே மாநகராட்சியில் நடக்கும் மாமன்ற கூட்டத்திற்கு வருகை தருகிறேன்.
நான் டீ மிச்சர் சாப்பிட வரவில்லை என காட்டமாக தெரிவித்தார். மேலும் சில வேலைகள் பெயரளவிற்கு மட்டுமே நடப்பதால் இதனை கண்டிக்கும் விதமாக ஓட்டு போட்ட சட்டை அணிந்து மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன் என அவர் தெரிவித்தார். உடன் மாவட்ட செயலாளர் ஜனா ஸ்ரீ முருகன், மாவட்ட துணை தலைவர் கீரைத்துறை குமார், மண்டல் தலைவர் செந்தில்நாதன், பொதுச்செயலாளர் பாலமுருகன், ஓபிசி அணி மாவட்ட துணை செயலாளர் விக்னேஷ்சிவன், பாண்டி மற்றும் கிட்டுப்பிள்ளை, மாரிமுத்து, சோலை, கார்த்திக், சதீஷ், பாடகர் மாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.