நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தஞ்சையில் பேட்டி
தஞ்சாவூர்,ஜுன்.23:
தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டம் தஞ்சை பெசன்ட் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் புரவலர் பூ.விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக இன்று (23ந்தேதி) ஆணையக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம் என்று அறிவித்த ஆணைய தலைவரை கண்டித்து, விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
அணைகட்ட அனுமதித்தாள் தமிழகத்திற்கு பாரத பிரதமர் மோடி எப்போது வந்தாலும் அவருக்கு கறுப்புக்கொடி காட்டுவது. மேலும் பா.ஜ.க.விற்கு ஓட்டுப்போட மறுப்பது. குறுவை சாகுபடிக்கும், சம்பா சாகுபடிக்கும் கடைமடை வரை காவிரி நீர் கிடைக்க மாவட்ட ஆட்சியர் உறுதிச் செய்ய வேண்டும். குறுவை தொகுப்பு வழங்க வேண்டும். டிஏபி யூரியா தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்க வேண்டும். கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிகளில் கல்விக் கடன் வழங்க வேண்டும்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 மற்றும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3,500 விலை நிர்ணயம் செய்து உடனடியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியாறு வாய்க்கால்கள் வெண்ணாறு அதன் வாய்க்கால்கள் கல்லணை கால்வாயில் அதன் வாய்க்கால்கள் வடகிழக்கு பருவமழையின் போது கரைபுரண்டு வருகின்ற தண்ணீரால் உடையாமல் பாதுகாக்க ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில செய்தியாளர் அரவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.