நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் பிரதமர் பேச்சு

Loading

சென்னை, மத்திய அரசின்பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். வரவேற்பு ஐதராபாத்தில் இருந்து தனிவிமானத்தில் சென்னை வந்த பிரதமரை கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐ.என்.எஸ். அடையாறுக்கு வந்தார். அங்கு அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் வந்தனர். வாழ்த்து கோஷம் அப்போது அரங்கத்தில் இருந்த தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சியினர் மிகுந்த சத்தத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பி அவர்களை வரவேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் நோக்கி கையசைத்தும், தலை வணங்கியும் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மத்திய இணை மந்திரி எல்.முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

தமிழகத்தின் பங்களிப்பு அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவோடு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இங்கு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இதுவாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்ததற்கு நன்றி.

தமிழ்நாட்டில் 5 நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்கும், ஒரு ரெயில்வே திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. 3 ரெயில்வே திட்டங்களும், பைப்லைன் திட்டம் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 1,152 வீடுகளின் திறப்பு விழாவும் நடைபெறுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகமிக முக்கியமான திட்டங்களாகும். தமிழ்நாடு பல்வேறு வகையிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் எனப் பல்வேறு வகையிலும் தமிழ்நாடு ஒரு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அளித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் பேச்சு நிகழ்ச்சியில் ரூ.31,530 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அவற்றில் 5 திட்டங்கள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருந்த திட்டங்களாகும். மற்ற 6 திட்டங்கள், இனி தொடங்குவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களாகும். அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். அப்போது இலங்கையில் நிலவும் சூழல் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார். அவர் பேசியதாவது:- இலங்கை பிரச்சினை இலங்கை சிரமமான சூழ்நிலையை கடந்து கொண்டிருக்கிறது.

அங்கு நிலவும் தற்போதைய சூழல் உங்களுக்கு நிச்சயம் கவலையளிக்கக்கூடியதாக இருக்கும். ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கைக்கு அனைத்துவிதமான உதவிகளையும் இந்தியா அளித்து வருகிறது. நிதி, எரிபொருள், உணவு, மருந்துகள், பிற அத்தியாவசிய பொருட்களும் இதில் அடங்கும். இலங்கைக்கு பொருளாதார ஆதரவு அளிப்பது தொடர்பாக சர்வதேச மன்றங்களில் இந்தியா உரக்க பேசி இருக்கிறது. ஜனநாயகம், சிரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். தொடர்ந்து அந்த நாட்டுக்கு உதவுவோம்.

இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு இடங்களில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி, ரெயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை மந்திரி வி.கே.சிங், தமிழக அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ. க. நிர்வாகிகள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், காயத்திரி ரகுராம் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சென்னை மேயர் பிரியா உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். டெல்லி சென்றார் நிகழ்ச்சி இரவு 7.30 மணியளவில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் அங்கிருந்து இந்திய விமானப் படை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *