மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
மேட்டூர், மேட்டூர் அணை மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசனத்துக்குட்பட்ட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடியில் முதலில் ஈடுபடுவார்கள். பின்னர் சம்பா, தாளடி சாகுபடியில் ஈடுபட உள்ளனர்.
நீர்மட்டம் 117 அடி தற்போது இந்த ஆண்டு கோடை காலத்தில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதாவது அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 47 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வந்து 117 அடியாக நீர்மட்டம் உயர்ந்து அணை ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சேலம் வந்தார். அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் மேட்டூரில் இரவு தங்கினார். இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்கிறார். பின்னர் அணையில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர் மீது மலர் தூவுகிறார்.
இதையொட்டி அங்கு விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடியில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பயன்பெறுகிறது. தொடர்ந்து அடுத்த ஆண்டு (ஜனவரி) 28-ந் தேதி வரை திறந்து விடப்படும் தண்ணீர் சம்பா, தாளடி என முப்போக விளைச்சலுக்கும் பயன்படுத்தப்படும். மேட்டூர் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக குறித்த காலமான ஜூன் 12-ந் தேதி அன்று 18 ஆண்டுகளும், ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவே 10 ஆண்டுகளும், காலதாமதமாக 60 ஆண்டுகளும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.