இன்று அட்சய திருதியை: தங்க நகைகள் வாங்க கடைகளில் சிறப்பு ஏற்பாடுகள்

Loading

சென்னை,
இன்று (செவ்வாய்க்கிழமை) அட்சய திருதியை தினம் ஆகும். இந்த நாளில் தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை ஆகும்.
இதனால் தங்கத்தின் விலை என்னதான் விண்ணை தொடும் அளவில் இருந்தாலும், அட்சய திருதியையான இன்று நகைக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும்.
இதை முன்னிட்டு ஏராளமான நகைக்கடைகள் மக்களை கவரும் வகையில் சலுகைகள் அறிவித்துள்ளன. குறிப்பாக செய்கூலி, சேதாரம் இல்லை, கற்களுக்கு விலை இல்லை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நகைக்கடைகள் அறிவித்து உள்ளன.
அதுமட்டுமின்றி நகை வாங்க முன்பதிவு செய்யும் வசதியையும் சில கடைகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த ஆண்டு அட்சய திருதியை முகூர்த்த நேரமாக இன்று காலை 5.49 மணி முதல் பகல் 12.13 வரை குறித்துள்ளனர். இந்த நேரத்தில் மக்கள் தங்கம் வாங்க அதிகளவில் நகை கடைகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக பெண்கள் நேற்றே நகை கடைகளுக்கு சென்று தாங்கள் வாங்க இருக்கும் நகையை தேர்வு செய்து விட்டு சென்று உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக நகைக்கடைகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அட்சய திருதியையான இன்று அதிகமானோர் நகை வாங்க வருவார்கள் என்பதால், பிரபல நகைக்கடைகளில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அதிகாலை முதலே பொதுமக்கள் நகை வாங்க வருவார்கள் என்பதால் தியாகராய நகர், புரசைவாக்கம், அண்ணாசாலை உள்பட சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும். மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும், எனவே தங்கத்தின் விலை அதிகரித்திருந்தாலும் விற்பனை அமோகமாக இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *