நாமக்கல் அருகே 11 வயது சிறுமி கடத்தல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், எருமை பட்டி அருகே உள்ள காளி செட்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சரவணன் (வயது 39) லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கௌசல்யா (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஊராட்சி மன்றம் பின்புறம் கடந்த ஆறு வருடமாக முருகேசன் என்பவரின் மாடி வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். இவருடைய 11 வயது உடைய மகள் புதுப்பட்டி இல் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு சரவணனின் மனைவி கௌசல்யா (29) தனது குழந்தைகளுடன் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரவு சுமார் ஒன்றரை மணி அளவில் முகமூடி அணிந்த 2 நபர்கள் மொட்டைமாடிக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த கௌசல்யாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர்.
மேலும் கௌசல்யா மற்றும் மகன் வாய்களை மூடி கைகளை பின்னால் கட்டி விட்டு நீங்கள் இருவரும் சத்தம் போட்டால் மகளை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் சிறுமியை வந்த வழியாக கடத்தி சென்றுள்ளனர். மேலும் கௌசல்யா அணிந்திருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர்.
பின்னர் கௌசல்யா கத்தி மூலமாக கட்டுகளை அழுத்து கொண்டு சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் வந்து உடனடியாக எருமப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதை அடுத்து எஸ் பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதில் எருமப்பட்டி செல்லும் சாலையில் கஸ்தூரிப்பட்டி புதூர் வரை சென்று நின்று விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் கைரேகை நிருபர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சிறுமியை சொத்துக்காக கடத்தினரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பெண்ணின் அப்பா சரவணன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் லாரிக்கு சென்றவர் காலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.
பள்ளி மாணவியை கடத்திய போது அவர்கள் வீட்டில் இருந்த செல்போனிலிருந்து சிம் கார்டையும் உருவி சென்றனர். இந்த நிலையில் காலை 11 மணி அளவில் வீட்டின் உரிமையாளரான முருகேசனுக்கு போன் செய்து மாணவியை உயிருடன் வேண்டும் என்றால் 50 லட்சம் பணம் தரவேண்டும் எனவும் மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.