தஞ்சை அருகே விளார் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
தஞ்சாவூர், ஏப்.25.
தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ந் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தஞ்சை அடுத்த விளார் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி மைதிலி ரத்தின சுந்தரம் தலைமையில் துணைத்தலைவர் சுந்தரம், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் விளார் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வறுமை ஒழிப்பு, அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல வாழ்வு வாழ்தல், அனைத்து குழந்தைகளும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும், சத்து குறைபாடு இன்றி வளர்ந்து தேவையான பாதுகாப்பு அளித்தல், அவர்களது திறமைகளை வெளிக்கொணர்தல், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், அனைவருக்கும் தேவையான அடிப்படை சேவைகளை வழங்குவது, தகுதியுடைய அனைவருக்கும் சமூக பாதுகாப்புகளை ஏற்படுத்துவது, நலத்திட்டங்களின் பலன்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகை செய்தல் என்பன உள்ளிட்ட 12 நீடித்த வளர்ச்சி தொடர்பான கூட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் அது தொடர்பாக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி ரத்தின சுந்தரம், ஊராட்சி உறுப்பினர்கள் சரவணன், கற்பகம், சக்தி, பிரவீனா, கவிதா, வசந்தா, வாசுகி, திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.