சென்னை அயோத்தியா மண்டப விவகாரம்: பா.ஜனதா முயற்சி பலிக்காது – மு.க.ஸ்டாலின்

Loading

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு தொகுதி) அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.

அயோத்தியா மண்டபம்

அப்போது அவர், “நேற்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது. சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் இதை செய்துள்ளது” என்றார். தொடர்ந்து அவர் பேசிய சில கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

வழக்கு தள்ளுபடி

1958-ம் ஆண்டு இந்த சமாஜம் உருவாக்கப்பட்டது. இந்த சமாஜம் மீது 2004-ம் ஆண்டு முதல் பல்வேறு முறைகேடு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு விசாரணை நடத்தப்பட்டது. சமாஜத்தின் நடவடிக்கை எதிராக அமைத்துள்ளது என்று அறிக்கை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தக்கார் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதன் காரணமாக தடை ஆணை விதிக்கப்பட்டது. கடந்த 17-3-2022 அன்று தடை ஆணையை நீதிமன்றம் ரத்து செய்ததுடன் வழக்கையும் தள்ளுபடி செய்தது.

பக்தர்களிடம் பணம் சுரண்டல்

அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை அமலுக்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பா.ஜ.க.வினர் அங்கு சென்று பூட்டு போட்டனர். அந்த சமாஜத்துக்கு சொந்தமாக திருமண மண்டபம், காரியக் கொட்டகை உள்ளது. இந்தியாவிலேயே குளுகுளு வசதி கொண்ட காரியக் கொட்டகை இதுவாகத்தான் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் வாடகை கட்டணம் அதிகமாக வசூலித்துள்ளனர். பக்தர்களிடம் இருந்து பணம் சுரண்டப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரானவராக சித்தரிக்கின்றனர். அர்ச்சகர்களின் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான். 9,590 அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் இந்த ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இதற்காக, மாதம் ரூ.10 கோடி செலவு செய்யப்படுகிறது.

இதுதான் திராவிட மாடல் ஆட்சி. சட்டத்திற்கான ஆட்சி. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வேண்டுகோள்

இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திலே இருக்கிறது. இன்று அதிலே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இருந்தாலும், நம்முடைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிக விளக்கமாக என்ன சொல்ல வேண்டுமோ, அவை அனைத்தையும் பதிலாக இங்கே தந்திருக்கிறார். எனவே, நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை.

இருந்தாலும், பா.ஜ.க.வை சேர்ந்த உறுப்பினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். அது என்னவென்று கேட்டால், ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இதுதான் என்னுடைய வேண்டுகோள். சாமானிய மக்கள் பாதிக்கிற வகையில், இன்றைக்கு பெட்ரோல் விலை, டீசல் விலை, அதேபோன்று, கியாஸ் சிலிண்டர் விலை, இவையெல்லாம் உயர்ந்து கொண்டே போகிறது. அதைக் கட்டுப்படுத்துகிற முயற்சியிலே நீங்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

அரசியலை புகுத்த வேண்டாம்

அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியைப் பற்றி விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளிடத்திலே, குறிப்பாக, பிரதமரிடத்திலே நான் வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறேன். எனவே, அதற்கு உறுதுணையாக இருந்து, அதைப் பெறுவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும்.

நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் நடக்க வேண்டும். எனவே, தேவையில்லாமல், இதிலே அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்களேயானால், அது நடக்கவே நடக்காது என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *