திட்டமிட்டே அ.தி.மு.க. மீது பழி சுமத்தப்படுகிறது எடப்பாடி பழனிசாமி பேட்டி
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு 26-2-2021 அன்று சட்டமன்றத்திலே சட்டம் கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து பலர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும்போதே வக்கீல் போதிய ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. அரசு மூத்த வக்கீலை வைத்து வாதாடவில்லை.
ஆணையம் செயல்படவில்லை
அதோடு அ.தி.மு.க. அரசு சாதி வாரியாக கணக்கெடுப்பு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஒரு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, 6 மாத காலத்திற்குள் இந்த ஆணையம், தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுத்து அதனை அறிக்கையாக அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆட்சியாளர்கள் இந்த ஆணையத்தின் கால அளவை நீட்டிக்கவில்லை. ஆணையம் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
அ.தி.மு.க. மீது பழி
ஐகோர்ட்டு மதுரை கிளையில் சரியான தரவுகளை வக்கீல்கள் சமர்ப்பிக்கவில்லை. அதனால் இந்த தீர்ப்பு நமக்கு எதிராக வந்தது. இந்த தீர்ப்பை வைத்துத்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும். தி.மு.க. அரசுதான் மேல்முறையீட்டை செய்தது. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல்களை வைத்து வாதாடினோம் என்று முதல்-அமைச்சர் சொல்கிறார்.
அப்படி என்றால் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து வழக்கு நடைபெற்றபோது, ஏன் மூத்த வக்கீல்களை வைத்து வாதாடவில்லை?. ஏன் முழுமையான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை?. ஏன் முழுமையான தரவுகள் கொடுக்கவில்லை. வாதத்திற்கு தேவையான ஆதாரங்களை எடுத்துவைக்கவில்லை. இதனால் ஐகோர்ட்டில் அது கிடைக்காமல் போய்விட்டது. 10.5 சதவீதத்திற்கு எதிராக வந்துவிட்டது. அவை அனைத்தையும் மறைத்து இந்த அரசு வேண்டும் என்றே திட்டமிட்டு, அ.தி.மு.க. அரசு மீது பழி சுமத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வரப்பிரசாதம்
அதனைத்தொடர்ந்து நிருபர் ஒருவர், அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “இது ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட அரசு பள்ளியிலே படிக்கின்ற மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்” என்றார்.