ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாகபுதுவையில் வங்கி சேவை முற்றிலும் முடக்கம்அதிக பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி

Loading

புதுச்சேரி
ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் புதுவையில் வங்கி சேவை முற்றிலும் முடங்கியது. அதிக எண்ணிக்கையில் பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
வங்கி சேவைகள் பாதிப்பு
 
தொழிற்சங்க விதிகள் மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை திரும்பப்பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு சார்பு நிறுவனங்களை மூடுவதையும், அப்பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதையும் கைவிட வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
 இந்த வேலைநிறுத்த போராட்டம் புதுவையிலும் எதிரொலித்தது. இதையொட்டி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரும்பாலானவை மூடியே கிடந்தன. ஒருசில வங்கிகளில் சில ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்தனர்.
அதேநேரத்தில் தனியார் வங்கிகள் செயல்பட்டன. வங்கி ஊழியர்களின் போராட்டம் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.250 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வருமான வரித்துறை
 
வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டு வருமான வரித்துறை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். செயலாளர் அனிருத் ஷர்மா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் கோவிந்தன், சங்க பொருளாளர் சிற்றரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் அஞ்சல்துறை ஊழியர்கள், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், எல்.ஐ.சி. ஊழியர்கள் அந்தந்த தலைமை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள்
 
புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினர் சுதேசி மில் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சிவஞானம் முன்னிலை வகித்தார்.
தர்ணாவில் கவுரவ தலைவர் பாலமோகனன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர்கள் சேகர், முனிசாமி, பொருளாளர் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கான சம்பளம், படிகள் ரத்து செய்யப்படும் என்று புதுவை அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக ஒருசில ஊழியர்களை தவிர பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதனால் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின.
இதேபோல் தொழிற்பேட்டைகளிலும் ஒரு சில நிறுவனங்களில் பணியாற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டும் பணிக்கு வரவில்லை. பிற ஊழியர்களை கொண்டு தொழிற்சாலைகள் இயங்கின.
பஸ்களில் கூட்டம்
 
புதுவை உப்பளம் சாலையில் உள்ள தமிழக அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து வழக்கமாக 48 பஸ்கள் இயக்கப்படும். ஆனால்  அந்த பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அனைத்து பஸ்களும் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதேநேரத்தில் புதுவை அரசு பஸ்களும் (பி.ஆர்.டி.சி.), தனியார் பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து புதுச்சேரி வழியாக இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் குறைவான எண்ணிக்கையில் புதுச்சேரிக்கு வந்து சென்றன.
இதனால் வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வந்து இருந்தவர்களும், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வேலைபார்ப்பவர்களும் பஸ்கள் கிடைக்காமல் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதினர்.
நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் ஒரு சில பஸ்கள் மட்டுமே வந்து சென்றன. இதனால் வேறு வழியின்றி அந்த பஸ்களில் போட்டி போட்டுக் கொண்டு ஏறி நின்றபடியே அவர்கள் பயணம் செய்து அவதிக்குள்ளானார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *