வண்டலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Loading

வண்டலூர், மார்ச் 21-
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தகவல் அறிந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவிகள், பட்டதாரிகள் வண்டலூரில் உள்ள வேலைவாய்ப்பு முகாமுக்கு நேற்று வந்திருந்தனர்.
சென்னை வண்டலூர் கிரசண்ட் கல்லூரியில் நேற்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து படித்த இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமை வண்டலூர் கிரசண்ட் கல்லூரியில் நேற்று நடத்தியது.
இந்த முகாமில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், கண்ணாடி தொழிற்சாலை, கார் கம்பெனிகள், ஆட்டோ மொபைல், கட்டுமான நிறுவனங்கள், பிரபல ஜவுளி- நகைக்கடை நிறுவனங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெற்றன.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவதால் ஒவ்வொரு நிறுவனம் சார்பிலும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய தனித்தனியாக ‘ஸ்டால்கள்’ அமைக்கப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தகவல் அறிந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவிகள், பட்டதாரிகள் வண்டலூரில் உள்ள வேலைவாய்ப்பு முகாமுக்கு நேற்று வந்திருந்தனர்.

8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் ஆகிய கல்வித்தகுதி அடிப்படையில் படிப்பு மற்றும் தகுதிக்கேற்ப வேலைக்கு ஆட்களை நிறுவனங்கள் தேர்வு செய்தன.
இந்த வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து நியமன ஆணைகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10.15 மணிக்கே வண்டலூர் வந்துவிட்டார்.

அவரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கு நடைபெற்று வந்த வேலைவாய்ப்பு முகாமை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார்.
என்னென்ன நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்க வந்துள்ளன? மொத்தம் எவ்வளவு பேரை தேர்வு செய்ய உள்ளனர்? என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
அவருக்கு வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வீரராகவ ராவ், திறன் மேம்பாட்டு துறை செயலாளர் கிர்லோஷ் குமார், விரிவான விவரங்களை தெரிவித்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உடன் இருந்தார்.
அதன் பிறகு அங்கு தேர்வான இளைஞர்கள், மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி வேலைக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் செய்வதையும் அங்கிருந்தபடியே அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு வரலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பெருந்துணைத் தலைவர் வி.எஸ்.ஆராமுதன் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களும் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *