திருவள்ளூர் அருகே 117 சவரன் நகைகள் சினிமா பாணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நூதன கொள்ளை சம்பவத்தில் 12 பேர் கைது
திருவள்ளூர் மார்ச் 11-
திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.பாலமுருகன் அரசு ஒப்பந்ததாரராகவும் பணிகளை எடுத்து செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது இன்னோவா காரில் போலீஸ் உதவி ஆய்வாளர் வேடத்தில் ஒருவர் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் காரில் வந்து இறங்கினர். அப்பொழுது பாலமுருகனின் வீட்டின் கேட்டை தட்டி உள்ளனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகன் கேட் தட்டும் சத்தம் கேட்டு எழுந்து வந்துள்ளார். அவரிடம் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி, பாலமுருகனிடம் செங்கல் சேம்பர் தொழிலும் செய்து வருவதால் தாங்கள் தற்போது வாங்கிய செங்கல் சேம்பரை எந்த வருமான அடிப்படையில் வாங்கினீர்கள் எனக் கேட்டு, அதற்கான பத்திரத்தை கொண்டு வரச் சொல்லி அது குறித்து விசாரிப்பது போல் விசாரித்துவிட்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், அதற்கெல்லாம் வருமான வரி செலுத்தியது குறித்து கேட்டு விட்டு வீட்டிலுள்ள நகை பணத்தை கொண்டு வரச்சொல்லியுள்ளனர்.
உடனே பாலமுருகன் வீட்டிலிருந்த 117 சவரன் தங்க நகைகள், ரூ. 2.50 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சொத்து, பத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுத்துள்ளார். இதனையடுத்து 20 நிமிடத்தில் விசாரணை முடிந்ததாக கூறி ஒரு செல்போன் நம்பரை கொடுத்துவிட்டு, எங்களை நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு கூறிவிட்டு 117 சவரன் தங்கநகைகள், ரூ. 2.50 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சொத்து, பத்திரங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு எந்த ரசீதும் கொடுக்காமல் தாங்கள் கொண்டு வந்த இனோவா காரில் ஏறிச் சென்றுவிட்டனர்.இதனால் சந்தேகமடைந்த இதனைத் தொடர்ந்து பாலமுருகன் அவர்கள் சென்ற பிறகு கொஞ்சம் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார் அப்போது அந்த செல்போன் எண் உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த பாலமுருகன் உடனடியாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் துறை இணை ஆணையர் மகேஷ்குமார், பூந்தமல்லி உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன், செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். மேலும் வீட்டு வாசலில் உள்ள கண்காணிப்பு காமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
அதில் வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந்தவரும் தொழுவூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியுமான வசந்தகுமார் மற்றும் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் வேலன் மற்றும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகிய 3 பேரும் வெள்ளகுளம் பகுதியில் உள்ள பாலமுருகன் குறித்து தகவலை கோயம்புத்தூரைச் சேர்ந்த டேனியல், நந்தகுமார் சிவமுருகன், பிரகாஷ் வினோத், கவிதா,.ரென்னிஸ், அஸ்கர் அலி பார்த்தசாரதி ஆகிய 9 பேருடன் சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த 1-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதனையடுத்து கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்த 12 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய 2 காரையும் பறிமுதல் செய்ததோடு கொள்ளையடித்து நகையில் 35 சவரன் நகை மற்றும் அதை விற்று வந்த பணம் கொள்ளையடித்த பணம் என 3.50 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அதிகாரிகள் போல் செல்வதற்காக காவல் அதிகாரி போன்ற சீருடையுடன் சென்றதால் அதையும் பறிமுதல் செய்து 12 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெள்ளக்குளம் பகுதியைச்சேர்நத் திமுக பிரமுகர் வசந்தகுமார் என்பவர் அரசு ஒப்பந்ததாரர் பாலமுருகனை ஒரு வாரமாக நோட்டமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.