‘குடியிருப்புகள் இனி குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும்’ முதல்-அமைச்சர் அறிவிப்பு

Loading

சென்னை,

தி.மு.க. சார்பில் மகளிர் தின விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கேரளா மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா, இந்திய குழந்தைகள் நல மன்றத்தின் கவுரவ துணைத்தலைவர் சந்திராதேவி தணிகாசலம், கீழக்கரை தசிம்பீவி அப்துல் கல்லூரி முதல்வர் சுமையா தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, கீதாஜீவன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் தி.மு.க. மகளிர் அணிக்கான புதிய இணையதளத்தை (www.dmkwomenswing.com) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

திராவிட மாடல் வெற்றி

அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நான் அதிகம் பேசமாட்டேன். பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்டவேண்டும். அது கட்சி பணியாக இருந்தாலும் சரி, ஆட்சி பணியாக இருந்தாலும் சரி, நான் அப்படித்தான் செயல்படுகிறேன். மகளிர் தினம் என்பதையும் தாண்டி இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று 50 சதவீதத்தையும் தாண்டி பெண்கள் பொறுப்பேற்று இருக்கிறார்கள். சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் நமக்கு கடந்த 4-ந் தேதியே அது வந்துவிட்டது. உள்ளாட்சி பொறுப்புகளில் பெண்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர். இதனை பார்க்கும்போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதுதான் திராவிட மாடல் வெற்றி.

மேயர் பதவிகளில் கூட்டணிக்கு ஒரு இடம் போக, மீதமுள்ள 20 இடங்களில் 11 இடங்களை பெண்கள் ஆக்கிரமித்துள்ளனர். துணை மேயர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு இல்லாத சூழலிலும் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். நகராட்சி-பேரூராட்சி தலைவர் பதவிகளில் 649 இடங்களில் 350 இடங்களில் பெண்களே இருக்கிறார்கள். இது மாபெரும் சிறப்பு. இதுதான் திராவிட மாடல்.

சலுகை அல்ல, உரிமை

50 சதவீத இடஒதுக்கீடு என்றாலும், அதையும் தாண்டி சுமார் 60 சதவீத உள்ளாட்சி இடங்களை பெண்கள் பிடித்திருக்கிறார்கள். இது பெரியார் கண்ட கனவு, அண்ணாவின் சீரிய உணர்வு, கலைஞரின் எண்ண ஓட்டமும் இதுதான்.

மார்ச் 8-ந் தேதி என்பது மகளிருக்கு மட்டுமல்ல, மனித உரிமைக்கும் முக்கியமான நாள். மகளிரின் பல்வேறு உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வென்றது, திராவிட இயக்கம். சாதி-மத பேதங்களை போக்க பெரியார் அரும்பாடுபட்டார். பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை, அனைத்து பணிகளிலும் சம உரிமை என அடுக்கடுக்கான திட்டங்களை கொண்டுவந்தது தி.மு.க. பல்லாண்டு கால போராட்டத்தின் விளைவு, இன்று நம் கண்களுக்கு முன்பு அவை அனைத்துமே நிறைவேறி இருக்கிறது.

மகளிர் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அரசு தி.மு.க. தான். அந்தவகையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நான் முதல்-அமைச்சர் ஆனதும், பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டுவந்தோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, உரிமை. முன்பு 40 சதவீத பெண்களே பஸ்களில் பயணித்து வந்தனர், தற்போது இது 61 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதனால் அரசுக்கு இழப்பு என்று சொல்லமாட்டேன். முன்னேற்றத்துக்கான ஒரு படி தான் என்பேன்.

குடும்ப தலைவிகளின் பெயரிலேயே வீடுகள்

கலைஞர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக, ஒன்றுகூடி வாழும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவபுரம் தொடங்கினார். சமத்துவபுரத்தில் வீடுகள் என்பது குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்பட்டது. அதை மனதில் வைத்து இப்போது நானும் ஒரு அரசு அறிவிப்பு வெளியிடுகிறேன். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்பதை, நாம் ஆட்சிக்கு வந்தபிறகு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றிவிட்டோம். இனி அதில் வழங்கப்படும் வீடுகள் அனைத்தும் குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன். பெண்களை வார்த்தையில் போற்றாமல், வாழ்க்கையில் போற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நினைவு பரிசு

தி.மு.க. மகளிர் தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட சிறப்பு விருந்தினர்களுக்கு பெண்கள் பெருமை போற்றும் ஓவியம் வரையப்பெற்ற பறை நினைவு பரிசாக வழங்கப்பட்டது கவனம் ஈர்த்தது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *