முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை புத்தகம் – ராகுல்காந்தி வெளியிடுகிறார்

Loading

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று மாலை 3.30 மணி அளவில் நடக்கிறது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகிக்கிறார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசுகிறார்.

ராகுல்காந்தி, பினராயி விஜயன்

‘உங்களில் ஒருவன்’ (பாகம்-1) புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், திரைப்பட நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசுகிறார்கள். விழாவில் நூல் ஆசிரியரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தி பேசுகிறார்.

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

மு.க.ஸ்டாலின் இந்த விழாவுக்கான அழைப்பிதழில், ‘எனது 23 வயது வரையிலான வாழ்க்கைதான் இந்த புத்தகம்! 1953 மார்ச் 1 அன்று நான் பிறந்தேன். 1976 பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்று சுவடுகளை உங்களில் ஒருவன் முதல் பாகமாக எழுதி இருக்கிறேன்’ என்று தனது கைப்பட எழுதி இருக்கிறார்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களும், தி.மு.க. நிர்வாகிகளும், அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகத்தை சேர்ந்தவர்களும், முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *