உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 5 ஆயிரம் தமிழக மாணவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Loading

சென்னை,

உக்ரைன் நாட்டில் ரஷிய ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

5 ஆயிரம் மாணவர்கள் தவிப்பு

24-2-2022 அன்று (நேற்று) அதிகாலையில் ரஷிய ராணுவம் உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள் குறித்து தங்களின் உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த, தொழில்முறை படிப்புகள் பயிலும் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

உக்ரைனில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து நூற்றுக்கணக்கான துயர அழைப்புகளைத் நான் பெற்றுவருவதால், அவர்களை அவசரமாக உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு அழைத்துவர வேண்டும். உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.

24 மணி நேர உதவி மையம் திறப்பு

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்களைத் திறந்துள்ளது. மத்திய அரசு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் குடும்பங்களை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கவும், தமிழர்களை உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஏதுவாகவும், மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசு அளவில் ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு என்றே ஓர் இணைப்பு அலுவலரைத் தமிழ்நாட்டுக்கு என்று அறிவிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்துவர அந்நாட்டு அரசின் உயர்மட்ட அளவில் இப்பிரச்சினையை எடுத்துச் செல்லுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்பு விமானங்கள் இயக்க நடவடிக்கை

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் இருந்து “வந்தேபாரத்’’ மிஷன் போன்ற சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக அவசர நடவடிக்கை மேற்கொள்ள கோருகிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *