இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

Loading

ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில், 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா(16), உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12-வது இடத்தில் உள்ளார். இந்தத் தொடரில் இன்னும் 7 சுற்றுகள் உள்ளன.

உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

இதன்மூலம், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த மூன்றாவது இந்திய வீரர் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலக செஸ் சாம்பியனை வெற்றி கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். திறமையான பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *