திருவள்ளூர் அடுத்த வெள்ளாத்துக் கோட்டையில் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம்: வீண் பழி சுமத்துவதாக சாமியாரின் ஆதரவாளர்கள் ஆட்சியரிடம் புகார்
திருவள்ளூர் அடுத்த வெள்ளாத்துக் கோட்டையில் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம்: வீண் பழி சுமத்துவதாக சாமியாரின் ஆதரவாளர்கள் ஆட்சியரிடம் புகார்:
திருவள்ளூர் பிப் 21 : திருவள்ளூர் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் ஹேமமாலினி திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஹேமமாலினிக்கு நாகதோஷம் உள்ளதாகவும் அவரை அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் பூஜை செய்தால் தோஷம் தீரும் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததால் கடந்த 14ம் தேதி என மாணவியின் உறவினர்கள் அவரை வெள்ளாத்துக் கோட்டையிலுள்ள ஆசிரமத்தில் முனுசாமி என்ற சாமியாரிடம் பூஜை செய்ய சென்றதாகவும் அங்கேயே தங்க வேண்டும் என கூறியதால் உறவினருடன் தங்கியதாகவும் கூறப்படுகிறது.
மறுநாள் பூஜை முடிந்ததும் விடியற்காலை அங்குள்ள பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி ஹேமமாலினி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமமாலினியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆசிரமத்தில் பூச்சி மருந்து குடித்து மகள் உயிரிழந்ததால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் சாமியார் முனுசாமியை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரம சாமியார் முனுசாமியின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து, ஹேமமாலினி மரணத்தில் தவறான தகவல் பரவி வருவதால் உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருவதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
குழந்தை பாக்கியம் வேண்டி வருபவர்கள், புற்று நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் முனுசாமி, சாமியார் அல்ல என்றும், சித்த வைத்தியரான இவர் பல்வேறு உடல் உபாதைகளுக்கு சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை அளிப்பதையே தொழிலாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், ஹேமமாலினி சிகி்சசைக்காக வரவில்லை.
அவரின் பெரியம்மா மகேஸ்வரி என்பவரின் மகள் மகேஸ்வரிக்கு குழந்தை பாக்கியத்திற்காக மருந்து வாங்க வந்ததாகவும்,அவருடன் வந்த ஹேமமாலினி சிகிச்சைக்காக வரவில்லை என்றும், ஹேமமாலினியின் பெற்றோர் திட்டிதால் மிகுந்த மன உளைச்சுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்ததாகவும் தெரிவித்தனர்
மேலும், ஹேமமாலினியின் பெரியம்மா மகேஸ்வரி கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்றும், இந்த ஆசிரமத்தில் இந்து முறைப்படி பூஜைகள் நடைபெறுவதால் இங்குள்ள ஆலயத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவியின் மரணத்தை திசை திருப்பியதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் மாணவி மரணம் குறித்து காவல் துறையிநர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.