இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கியமான வர்த்தகக் குழுமத்தில் ரிலையன்ஸ்
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கியமான வர்த்தகக் குழுமத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது உற்பத்தி, சேவை, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து பல பிரிவுகளில் முதலீடு செய்து வருகிறது.
இந்நிலையில் தனது அஸ்திவாரமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முக்கியமான மாற்றத்தைச் செய்ய முடிவு செய்துள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம்.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் சமீபத்தில் அட்வெர்ப் டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனத்தில் 132 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து சிறிய அளவிலான பங்குகளைக் கைப்பற்றியது அனைவருக்கும் தெரியும். இந்நிறுவனம் தொழிற்சாலையில் பயன்படுத்தும் ரோபோ-க்களை உருவாக்குவதில் திறன் வாய்ந்தது.
அட்வெர்ப் டெக்னாலஜிஸ்
132 மில்லியன் டாலர் முதலீடு செய்து அட்வெர்ப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பங்குகளைக் கைப்பற்றிய ரிலையன்ஸ், இந்நிறுவனத்திடம் சுமார் 7,500 கோடி ரூபாய், அதாவது 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ரோபோ-க்களை ஆர்டர் செய்துள்ளது.
தொழிற்சாலை ரோபோ
5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தத் தொழிற்சாலை ரோபோவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் ஜாம்நகரில் இருக்கும் சுத்திகரிப்பு ஆலையில் நிறுவ உள்ளது. மேலும் இந்த ரோபோ-வை மும்பையில் இருந்தும் இயக்கும் வகையில் தனது 5ஜி தொழில்நுட்ப சேவையைப் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது.
5ஜி நெட்வொர்க் ரோபோ
இந்த டீல் குறித்து ரிலையன்ஸ் மற்றும் அட்வெர்ப் டெக்னாலஜிஸ் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாலும், அட்வெர்ப் தனது புதிய டைனமோ ரோபோ குறித்துப் பேசியுள்ளது. அந்த ரோபோக்கள் 5ஜி நெட்வொர்க்-ல் இணைத்து, தனது ப்லீட் மேனேஜ்மென்ட் தளமான லெஜியான் மூலம் ரிமோட் மூலம் இயக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
சீனா
சமீபத்தில் சீனா தனது 5 ஆண்டுத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்த போது, அதில் தொழிற்துறைக்கான ரோபோ-க்கள் தான் முக்கிய இலக்காக அறிவித்தது. சீனாவில் பெரும் பகுதி தொழிற்சாலையில் அதிநவீன ரோபோக்களை நிறுவி அதன் மூலம் உற்பத்தியில் புதிய உச்சத்தை அடைய உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.