நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிடுகின்றனர்

Loading

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 12 ஆயிரத்து 838 பதவியிடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 4-ந்தேதி நிறைவடைந்தது. மொத்தம் 74,383 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடந்த 5-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் 2,062 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று முன்தினம் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. 14,324 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

57,778 பேர் போட்டி

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அங்குள்ள 12 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. இதனால் மொத்த பதவியிடங்கள் எண்ணிக்கை 12,826 ஆக குறைந்தது. அதேபோன்று சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அங்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

மீதமுள்ள 12,825 பதவியிடங்களில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த பதவியிடங்களுக்கு 57,778 பேர் களத்தில் உள்ளனர். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 4 பேர் மாநகராட்சி கவுன்சிலர்கள், 18 பேர் நகராட்சி கவுன்சிலர்கள், 196 பேர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆவர்.

0Shares

Leave a Reply