ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்

Loading

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, பிப்.9 தமிழ்நாடு மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நட வடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம் வருமாறு:

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கை அரசு வசம் உள்ள தமிழ்நாடு மீனவர்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் நீரியல் வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அரசின் இந்த நட வடிக்கை சட்டத்துக்கு புறம்பானது. கவலைக்குரிய இந்த நட வடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இதுகுறித்து ஏற்கெனவே கடந்த 24.1.2022 அன்று எழுதிய கடிதத்தில், 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைப்பிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலை யில் உள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை வெளிப் படையான முறையில் அகற்றுவதற்கான முயற்சிகளை இறுதி செய்யவேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில், 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு சிறைப்பிடிக்கப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் விரைவில் விடுவிக்க உறுதிசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் 28.1.2022 தேதியிட்ட மின்னஞ்சலில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தெரி விக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட மீன்பிடி படகுகள் ஏலத்தை இலங்கைத்தரப்பு தொடராது என்றும் உறுதியளித்திருந்தது.

மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக இலங்கை செல்ல விருந்த அதிகாரிகளின் உத்தேசப்பயணத் திட்டத்திற்கு, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் இசைவாணை வழங்கியுள்ளதுடன், அப்பயணத்திற்கான புதிய தேதிகளை இறுதிசெய்யுமாறும், இலங்கைத் தரப்பிடமிருந்து அதற்கான ஒப்புதலைப் பெற்று, விரைவில் (குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே) அதைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு முன்மொழிந்த தேதிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இந்த பயணத்திற்கான திருத்தப்பட்ட தேதி 1.3.2022 முதல் 6.3.2022 வரை என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இலங்கை அரசு தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, எந்தவிதமான ஆலோசனையுமின்றி தொடர்ந்துள்ள ஏல நடவடிக்கை, இதற்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளை தடம்புரள செய்வதாக அமையும். மீட்க முடியாத நிலையில் உள்ள மீன்பிடிப் படகு கள் உரிய நீதித்துறை நடைமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே கூறப்பட்ட காரணங்களைக் கருத்தில்கொண்டு, இலங்கையால் முன்மொழியப்பட்ட ஏலத்தை தடுத்து நிறுத்தி டவும், 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 125 பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழ்நாடுபடகுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களின் உத்தேச பயணத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலை பெறவேண்டும்.

2018-க்கு பிறகு சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படை தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கும் முயற்சியில் பிரதமர் அவசரமாக தலையிட வேண்டும். இதன்மூலம் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

0Shares

Leave a Reply