பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு: அதிகாரி திடீர் சஸ்பெண்ட்
சென்னை, ஜன- 28
பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் தரம் மற்றும் மெத்தனம் குறித்த புகார்களை தொடர்ந்து தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது,
தைப் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் 21 சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கடந்த 21ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தினார், . இந்த கூட்டத்தில் பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் சில இடங்களில் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சில இடங்களில் கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடிகளை மிக விரிவாக விசாரணை செய்து முதலமைச்சரிடம் விளக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இனிவரும் காலங்களில் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தவல்கள் தெரிவிக்கின்றன.