தமிழக அலங்கார ஊர்தியில் வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு – அன்புமணி ராமதாஸ் கொதிப்பு
சென்னை: டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா?என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
73வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பார்வையாளர்கள் பங்கேற்பின்றி இன்று சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கொடியேற்றி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரிலிருந்து மூவர்ணக் கொடி மீது மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடைபெற்றன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான வேளாண்துறை சிறப்பு பதக்கம், கோட்டை அமீர் விருது ஆகியவற்றை விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் இன்றி சாத்தியமாகி இருக்காது.. மருத்துவத்தில் ஓபிசி இடஒதுக்கீடு.. எம்பி வில்சன் நெகிழ்ச்சி
வீரமங்கை வேலுநாச்சியார்
டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க உருவாக்கப்பட்ட வீரமங்கை வேலு நாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோர் அடங்கிய தமிழக ஊர்தி தமிழக குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றது.
அந்த ஊர்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அலங்கார ஊர்தி மூன்று ஊர்திகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பயணம்
முதல் ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையும் காளையார் கோவில் கோபுரம், மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மகாகவி பாரதியாரின் சிலை, சுப்ரமணிய சிவா இன்னொரு ஊர்தியிலும், வ.உ.சிதம்பரனார் தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய மூன்றாவது ஊர்தியும் முதல்வரால் கொடியசைத்து மாநிலம் தழுவிய பயணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அன்புமணி ராமதாஸ் கேள்வி
இதனிடையே டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா?என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
கடலூர் அஞ்சலையம்மாள்
நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
விளக்கம் தர வேண்டும்
டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.