இந்திய குடிமைப்பணிச் சேவைகள் விதிளைச் சீர்திருத்துதல் -ராகவ் சந்திரா
இந்திய குடிமைப்பணிச் சேவைகள் விதிளைச் சீர்திருத்துதல்
-ராகவ் சந்திரா
தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஐஏஎஸ் (பணி) விதிகள் 1954ஐ திருத்துவது
குறித்து, அனைத்திந்திய தன்மைக்கு அல்லது உள்ளூர் இயல்புக்கு முக்கியத்துவம்
தருவதா, மாநிலங்களுக்கு முன்னுரிமை தருவதா, அதிகாரிகள் எங்கு பணிபுரிய
வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குவதா
போன்ற கேள்விகளை சில மாநிலங்கள் முன்வைத்துள்ளன. மத்திய அரசுப் பணிக்கு
குறிப்பிட்ட அதிகாரியை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து
மத்திய அரசு அழைத்துக் கொள்ளலாம். இதில் முரண்பாடு ஏற்பட்டால் மத்திய
அரசின் முடிவே இறுதியானது ஆகும்.
யுபிஎஸ்சி மூலம் மத்திய அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை பணி நியமனம் செய்து
மாநில அரசுகளுக்கு பணி செய்ய அனுப்புகிறது. இந்த அதிகாரிகள் மத்திய / மாநில
அரசு என இரண்டின் கீழும் பணிபுரிய வேண்டிய கடப்பாடு உடையவர்கள் என்றாலும்
மத்திய அரசுக்கான அயலகப் பணியின் குறைந்தபட்ச காலகட்டம் என்பது
நிர்ணயிக்கப்படவில்லை.
மத்திய அயலகப் பணி ஒதுக்கீட்டை பயன்படுத்துவது என்பது 2011ல் 25%என
இருந்தது இப்போது 18%ஆகக் குறைந்துள்ளது. அரசின் அனைத்து நிர்வாக
நிலைகளிலும் ஐஏஎஸ் அதிகாரிகளே முதுகெலும்பாக இருக்கிறார்கள். மாவட்ட
ஆட்சியர்களாக மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் நிர்வாக அதிகாரிகளாக அனுபவம்
பெற்றுள்ள இவர்கள் ஒவ்வொரு மத்திய அமைச்சகத்திற்கும் துணைச் செயலாளர்கள்
மற்றும் இயக்குனர்களாக பணிபுரியத் தேவைப்படுகின்றனர்.
தேவை இல்லாமல் அடிக்கடி மாற்றப்படுவது ஆட்சியில் உள்ள கட்சிக்கு நெருக்கமாக
உள்ளவர்களுக்கு எதிராகச் செயல்பட்டால் தண்டிக்கப்படுவது, மத்திய அரசுப் பணிக்கு
செல்வதற்கான அனுமதி மறுக்கப்படுவது ஆகியவற்றை அதிகாரிகள் எதிர்கொண்டு
வருகின்றனர். இதற்கு மாறாக ஒருசில அதிகாரிகள் மாநில அரசின்
அரவணைப்பிலேயே தமது பணிக்காலம் முழுவதும் அந்தந்த மாநிலத்திலேயே
இருந்து விடுகின்றனர்.
இந்த காரணத்திற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பணிக்காலத்தில் மூன்றில் ஒரு
பங்கினை மத்திய அரசுப் பணியில் பணியாற்ற வேண்டும் என்று விதி ஏற்படுத்துவது
அவசியமானது ஆகும்.
இந்த அதிகாரிகள் ஒதுக்கப்பட்ட மாநில அரசுக்கு தேவைக்கு அதிகமான
விசுவாசத்துடன் இருக்காமல் தேசத்திற்கே கடப்பாடு உடையவர்களாக இருக்க
வேண்டும். அப்போதுதான் ஐஏஎஸ் பணியின் அனைத்திந்திய குணாம்சம்
காப்பாற்றப்படும்.
பணியில் சேர்க்கப்படும் போதே அதிகாரிகள் மத்திய, மாநில அரசுகள் இரண்டிலும்
குறிப்பிட்ட கால அளவுகளில் பணியாற்ற வேண்டும் என்பதை அவர்களுக்கு
தெளிவுபடுத்தி விட வேண்டும். உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் பயிற்சி
பெறுவதற்கும், தங்களது தனித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைகளுக்கு விண்ணப்பம்
செய்வதற்கு ஆன்லைன் முறையை ஏற்படுத்துவதற்கும், தேவைப்பட்டால் தனியார்
துறையில் குறிப்பிட்ட காலம் வரை பணியாற்ற அனுமதி அளிப்பதற்கும் வழிவகை
செய்யப்பட வேண்டும். மாநிலங்கள் இந்த அதிகாரிகளைத் திறம்படப்
பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு தனது அணுகுமுறையை
வகுத்துக் கொள்ள வேண்டும்.
கட்டுரை ஆசிரியர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் இந்திய அரசின்
செயலாளராக பணிபுரிந்துள்ளார்.