ரேஷன் கடை செயல்பாடு எப்படி? கார்டுதாரர்களிடம் விசாரிக்க உத்தரவு!
சென்னை–ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்கு செல்லும் முன், அந்த கடைக்கு உரிய ரேஷன் கார்டுதாரர்களை சந்தித்து, கடையின் செயல்பாடு குறித்தும், பொருட்கள் வினியோகம் குறித்தும் கேட்கும்படி, அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரியான அளவில் தரமாக கிடைப்பதை உறுதி செய்ய, கலெக்டர்கள், உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் மாதந்தோறும் ஆய்வு செய்ய, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.ஆய்வில் ஈடுபடும்போது, அதிகாரிகள் மேற் கொள்ள வேண்டிய வழிமுறைகளை, உணவு வழங்கல் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: ரேஷன் கடையின் தகவல் பலகையில், கடையின் பெயர், பணி நேரம், ஊழியர் பெயர் ஆகியவற்றுடன் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, விலை, வினியோகம் பற்றிய விபரங்கள் எழுதப்பட்டு உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும் போது, தரம் குறைவான பொருட்கள் இருந்தால், அவற்றை உடனே கிடங்குகளுக்கு அனுப்பி, தரமான பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருட்கள் இருப்பை சரிபார்த்து இருப்பு குறைவு அதிகம் இருந்தால், ஊழியர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகள் ரேஷன் கடைக்கு ஆய்வு செய்ய செல்லும் முன், அந்த கடையின் கார்டுதாரர்கள் இணைக்கப்பட்ட தெருவிற்கு சென்று குறைந்தது 10 கார்டுதாரர்களை சந்தித்து, அவர்களிடம் கடையின் செயல்பாடு குறித்து கருத்து கேட்க வேண்டும் அந்த கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள பொருட்களின் அளவு, நாள் ஆகியவற்றை குறித்து வந்து, கடையில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு பார்த்து, போலி பட்டியல் போடப்பட்டு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.