மொரிஷியஸ் குடியரசின் பிரதமர், மாண்புமிகு பிரவிந்த் குமார் ஜக்நாத் அவர்களே, மேன்மை பொருந்தியவர்களே

Loading

மொரிஷியஸ் குடியரசின் பிரதமர், மாண்புமிகு பிரவிந்த் குமார் ஜக்நாத் அவர்களே,

மேன்மை பொருந்தியவர்களே,

130 கோடி இந்திய மக்களின் சார்பாக மொரீஷியஸ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் மற்றும் தைப்பூச காவடி நல்வாழ்த்துகள்.

இந்தியா-மொரிஷியஸ் உறவுகளை வலுப்படுத்த மறைந்த சர் அனிருத் ஜக்நாத் அவர்களின் சிறப்பான பங்களிப்பை முதற்கண் நினைவுபடுத்த விரும்புகிறேன். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரான அவர், இந்தியாவில் பெரிதும் மதிக்கப்பட்டவர் ஆவார். அவர் மறைந்ததும், இந்தியாவில் தேசிய துக்க நாள் அறிவிக்கப்பட்டு, எங்கள் நாடாளுமன்றமும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது. 2020-ல் அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது எங்களின் பாக்கியம். துரதிர்ஷ்டவசமாக, அவர் வாழ்ந்த காலத்தில் விருது வழங்கும் விழாவை திட்டமிடுவதற்கு பெருந்தொற்று எங்களை அனுமதிக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் திருமதி லேடி சரோஜினி ஜக்நாத் விருதை ஏற்று எங்களைக் கவுரவித்தார். சர் அனிருத் ஜக்நாத் அவர்களின் மறைவுக்குப் பிறகு நமது நாடுகளுக்கு இடையே நடக்கும் முதல் இருதரப்பு நிகழ்வு இதுவாகும். எனவே, நமது பகிர்ந்த வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் கொண்டாடும் அதேவேளையில், அவரது குடும்பத்தினருக்கும், மொரீஷியஸ் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேன்மைமிகுந்தவர்களே,

வரலாறு, பூர்வீகம், கலாச்சாரம், மொழி மற்றும் இந்தியப் பெருங்கடலின் பகிரப்பட்ட நீர் ஆகியவற்றால் இந்தியாவும் மொரிஷியஸும் ஒன்றுபட்டுள்ளன. இன்று, நமது வலுவான வளர்ச்சிக் கூட்டாண்மை நமது நெருங்கிய உறவுகளின் முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது. கூட்டாளிகளின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அவர்களின் இறையாண்மையை மதிக்கும் வளர்ச்சிக் கூட்டணி குறித்த இந்தியாவின் அணுகுமுறைக்கு மொரீஷியஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பிரவிந்த் அவர்களே, மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம், புதிய கண், மூக்கு, தொண்டை மருத்துவமனை மற்றும் புதிய உச்ச நீதிமன்ற கட்டிடத்தை உங்களுடன் இணைந்து திறந்து வைத்ததை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். 5.6 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கையைத் தாண்டியுள்ள மெட்ரோவின் புகழை பற்றி அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று பரிமாறிக் கொள்ளப்பட்ட 190 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தின் கீழ், மெட்ரோவின் நீட்டிப்புக்கு ஆதரவளிப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவதில் புதிய கண், மூக்கு, தொண்டை மருத்துவமனை முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது எங்களுக்கு திருப்தியளிக்கும் மற்றும் ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.

உண்மையில், கொவிட் பெருந்தொற்றின் போது நமது ஒத்துழைப்பு முன்னுதாரணமானது. எங்கள் தடுப்பூசி மைத்ரி திட்டத்தின் கீழ், கொவிட் தடுப்பூசிகளை நாங்கள் முதலில் அனுப்பிய நாடுகளில் மொரீஷியஸும் ஒன்றாகும். இன்று மொரிஷியஸ் அதன் மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கிற்கு முழுமையாக தடுப்பூசி போட்ட உலகின் சில நாடுகளில் ஒன்றாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியப் பெருங்கடலுக்கான எங்களது அணுகுமுறையில் மொரிஷியஸும் ஒருங்கிணைந்ததாகும். 2015-ம் ஆண்டு மொரீஷியஸில் நான் மேற்கொண்ட பயணத்தின் போது, இந்தியாவின் கடல்சார் ஒத்துழைப்பு லட்சியமான – சாகர் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை- நான் கோடிட்டுக் காட்டியிருந்தேன்.

கடல்சார் பாதுகாப்பு உட்பட நமது இருதரப்பு ஒத்துழைப்பு இந்த தொலைநோக்கு பார்வைக்கு செயல் வடிவம் கொடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கொவிட் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், டோர்னியர் விமானம் ஒன்றை எங்களால் குத்தகைக்கு வழங்க முடிந்ததோடு, மொரிஷியன் கடலோர காவல்படைக் கப்பலான பாரகுடாவின் சிறிய மறுசீரமைப்பை மேற்கொள்ள முடிந்தது. வகாஷியோ எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்த உபகரணங்கள் மற்றும் நிபுணர்களை அனுப்பியது, நமது பகிரப்பட்ட கடல்சார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான நமது ஒத்துழைப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

மேன்மைமிகுந்தவர்களே,

நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இன்றைய நிகழ்வு மீண்டும் வெளிப்படுத்துகிறது. பிரவிந்த் அவர்களே, சமூக வீட்டுவசதி திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மொரிஷியஸ் மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கான இந்த முக்கியமான முயற்சியில் இணைந்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு முக்கியமான மற்ற இரண்டு திட்டங்களையும் நாம் இன்று தொடங்குகிறோம்: மொரீஷியஸின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக, அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்கு உதவும் அதிநவீன குடிமைப் பணிகள் கல்லூரி; மற்றும் ஒரு தீவு நாடாக மொரிஷியஸ் எதிர்கொள்ளும் காலநிலை சவால்களைத் தணிக்க உதவும் 8 மெகா வாட் சூரியசக்தி ஒளி மின்னழுத்தப் பண்ணைத் திட்டம்.

இந்தியாவிலும், எங்கள் கர்மயோகி இயக்கத்தின் கீழ் குடிமைப் பணிகள் திறன் மேம்பாட்டிற்கான புதுமையான அணுகுமுறைகளில் கவனம் செலுத்துகிறோம். புதிய குடிமைப் பணிகள் கல்லூரியுடன் எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம். 8 மெகா வாட் சூரிய சக்தி ஒளி மின்னழுத்தப் பண்ணையை நாம் தொடங்கும் நிலையில் , கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காப்-26 கூட்டத்தின் போது தொடங்கப்பட்ட ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் தொகுப்பு முயற்சியை நினைவு கூர்கிறேன். 2018 அக்டோபரில் நடந்த சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் முதல் மாநாட்டில் நான் முன்வைத்த யோசனை இது. கரியமில தடம் மற்றும் எரிசக்திச் செலவுகளை இந்த முயற்சி குறைப்பது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான புதிய வழியைத் திறக்கும். சூரிய சக்தி துறையில் ஒத்துழைப்புக்கு இந்தியாவும் மொரிஷியஸும் இணைந்து ஒரு பிரகாசமான உதாரணத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

சிறிய வளர்ச்சித் திட்டங்களுக்காக இன்று நாம் பரிமாறிக்கொண்டிருக்கும் ஒப்பந்தம், மொரிஷியஸ் முழுவதும் சமூக அளவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை வழங்கும். வரும் நாட்களில், சிறுநீரக மாற்று சிகிச்சைப் பிரிவு, தடய அறிவியல் ஆய்வகம், தேசிய நூலகம் மற்றும் காப்பகங்கள், மொரீஷியஸ் காவல் அகாடமி போன்ற பல முக்கியமான திட்டங்களில் பணியை தொடங்குவோம். மொரீஷியஸின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்பதை இன்று மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

2022-ம் ஆண்டு நமது மொரிஷியஸ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக, ஆரோக்கியமானதாக, வளமானதாக அமைய வாழ்த்துகிறேன்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *