பெண்களை முடக்கிப்போடும் மூட்டுவலி…
பொதுவாக வயதானவர்கள்தான் மூட்டுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு மூட்டு தேய்மானம் முக்கிய காரணமாக அமைகிறது.
மூட்டு வலியால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது எல்லா வயதினரையும் தாக்குகிறது. பெண்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மூட்டு வலி பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்களின் அன்றாட வாழ்க்கை சிரமம் நிறைந்ததாகிவிடுகிறது. பயணிக்க முடியாமலும், வேலைகளை செய்ய முடியாமலும் அவதிப்படுகிறார்கள். அதனால் சரியான வாழ்வியல் முறைகளை பின்பற்றி மூட்டுவலியின்றி வாழ அனைவரும் முயற்சிக்கவேண்டும். மூட்டுவலி ஏற்பட்டாலும், தொடக்கத்திலே விழிப்படைந்து அதற்கு தீர்வுகாணவும் முன்வரவேண்டும். மூட்டுவலி தொடர்புடைய பொதுவான விஷயங்கள் பற்றி பார்ப்போம்!
மூட்டுவலிக்கு முக்கியமான காரணங்கள்:
* தசைநார்களிலோ, மூட்டு எலும்பிலோ ஏற்படும் காயங்கள்.
* மூட்டுகளின் இயக்கத்தை எளிதாக்கும் `ப்ளூயீடு’ நிறைந்திருக்கும் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள்.
* காலில் தொடை எலும்பில் இருந்து கால் மூட்டிற்கு கீழே உள்ள எலும்புவரை தசைநார் நீண்டிருக்கிறது. ‘ஆன்டிரியர் க்ருஷியேட்டட் லிகமென்ட்’ எனப்படும் அதனை சுருக்கமாக ‘ஏ.சி.எல்’ என்று அழைக்கிறோம். இந்த தசைநாரில் ஏற்படும் காயங்கள் ‘ஏ.சி.எல் இஞ்சுரி’ எனப்படுகிறது. இந்த காயமும் கடுமையான வலியை ஏற்படுத்தும். கால்பந்து, கைப்பந்து விளையாடு பவர்கள் விளையாட்டின்போது இயல்புக்கு மாறாக கால்களை இயக்கும்போது திடீரென்று இந்த வகை காயங்கள் தோன்றும்.
* மூட்டில் இருக்கும் எலும்புகளிலோ, மூட்டுக் கிண்ணத்திலோ ஏற்படும் லேசான காயங்கள் கூட அதிக வலியை தோற்று விக்கும். நாற்காலியில் ஏறி நின்று வேலை செய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்தாலும், இருசக்கர வாகன பயணத்தில் கீழே விழுந்தாலும் மூட்டில் காயம் ஏற்படலாம். எலும்பு பலவீனமாக உள்ளவர்கள் நடக்கும்போது கீழே விழுந்துவிட்டால்கூட மூட்டில் காயம் ஏற்பட்டுவிடும்.
* நாம் பணி செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் ‘ஷாக் அப்சர்பர்’ போன்று செயல் படுபவை, மெனிஸ்கஸ் எனப்படும் ஜவ்வு போன்ற திசுக் களாகும். கால்மூட்டுகளின் அதிர்வுகளை தாங்கும் விதத்தில் இவை செயல்படும். எலும்புகள் பாதுகாப்பாக இயங்க உதவும் இந்த மெனிஸ்கஸ் பகுதியில் முறிவு ஏற்பட்டாலும் மூட்டு வலி தோன்றும். நமது முழு உடலையும் மூட்டு தாங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இயல்புக்கு மாறாக இயங்கும் சூழ்நிலை ஏற்படும்போது இந்த மெனிஸ்கஸ் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது.
* மூட்டுகளின் சிறப்பான இயக்கத்திற்காக சில வகை திரவங்கள் உள்ளன. மூட்டுக்கிண்ணத்தின் கீழ்ப்பகுதியிலும் ஒருவகை திரவம் உள்ளது. அதில் நீர் சேர்ந்தால் மூட்டின் இயல்பான இயக்கம் தடைபடும். அப்போதும் மூட்டு வலி தோன்றும்.
* இடுப்பு பகுதி முதல் மூட்டு வரை தசை போன்ற பகுதி ஒன்று உள்ளது. அதனை இலியோட்டிபியல் பான்ட் (iliotibial band) என்போம். இந்த தசை முறுக்கிக்கொண்டாலும் மூட்டு வலி தோன்றும். ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுகிறவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப் படுவார்கள்.
* மூட்டுக் கிண்ணம் இடம்பெயர்ந்து போகுதல், இடுப்பு மற்றும் கால் பாதங்களில் வலி ஏற்படுதல் போன்றவைகளாலும் மூட்டுவலி ஏற்படுவதுண்டு.
* சிலவகை வாத நோய்களும் மூட்டு வலிக்கு காரணமாக இருக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ், ரூமட்டோய்ட் ஆர்த்தரைட்டிஸ் போன்றவை இந்த வகை நோய்களாகும்.
இதுபோல் மூட்டு வலி ஏற்பட இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
பொதுவாக வயதானவர்கள்தான் மூட்டுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு மூட்டு தேய்மானம் முக்கிய காரணமாக அமைகிறது.
மூட்டு வலி கொண்டவர்களுக்கு சாதாரணமாக ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. மூட்டு தேய் மானத்தை கண்டறிய எக்ஸ்ரே சோதனை, எலும்பு முறிவை நுட்பமாக அறிய சி.டி.ஸ்கேன் பரிசோதனை, தசைநார்களில் கிழிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிய எம்.ஆர்.அய். ஸ்கேன், மூட்டுகளின் உள்பகுதி பாதிப்பை தெரிந்துகொள்ள ஆர்த்ரோஸ்கோப் பரிசோதனை போன்றவை வழக்கத்தில் உள்ளன.
பரிசோதனை மூலம் காரணத்தை கண்டறிந்த பின்பு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வலியை நீக்கும் மருந்து களோடு, சிகிச்சைக்கான மருந்துகளும் தரப்படும். சில பாதிப்புகளுக்கு ஊசிகளும் போடப்படும். மூட்டுகளை பலப்படுத்துவதுதான் வலியை குறைப்பதற்கான சிறந்த தீர்வு. மூட்டை சுற்றியுள்ள தசைகள் பலப் படுத்தப்பட்டால்தான் மூட்டின் இயக்கம் சீராகும். குறிப்பாக தொடைப்பகுதியின் முன்னும், பின்னும் இருக்கும் தசைகள் வலுப் படுத்தப்பட வேண்டும். அதற்கான உடற்பயிற்சிகளும் அவசியமாகும்.
மருந்து களோ, உடற்பயிற்சிகளோ முழுமையான பலன் தராதபோது அறுவை சிகிச்சை அவசியமாகும். பாதிப்புக்கு ஏற்ப பலவகையான நவீன அறுவை சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறுவை சிகிச்சைக்கு முன்பு அது பற்றி முழுமையாக நோயாளிகள் அறிந்துகொள்வது மிக அவசியம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை.
நம்மை தூக்கி சுமக்கும் எலும்புகளையும், அதற்கு பக்க பலமாக இருக்கும் மூட்டு களையும் சரியாக பராமரித்தால் வலியின்றி நிம்மதியாக வாழலாம்!