திருமாலின் 12 இயற்கை வடிவளவு புடைப்பு சிற்பங்கள்

Loading

சிற்பமும் சிறப்பும்
தமிழகத்தின் பெரிய குடைவரைகளில் ஒன்றான இந்த குகையில் திருமாலின் 12 இயற்கை வடிவளவு புடைப்பு சிற்பங்கள் உள்ளன.
ஆலயம்:பதினெண்பூமி விண்ணகரம், நார்த்தாமலை (நகரத்தார் மலை என்ற பெயரிலிருந்து மருவிய பெயர்), புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு
காலம்: பொ.யு 9-10 ஆம் நூற்றாண்டு.

ஒரே அளவு மற்றும் உருவ அமைதியுடன் உள்ள 12 திருமால் சிற்பங்களில், 10 கிழக்கு நோக்கியும் (கருவறையின் நுழைவு வாயிலின் இருபுறமும் 5) ஒன்று தெற்கு நோக்கியும் மற்றொன்று வடக்கு நோக்கியும் உள்ளன.அனைத்து சிற்பங்களும், சிறு தாமரை பீடத்தின் மீது சம பாதம் நின்ற வண்ணம், முன் வலக்கரத்தில் ‘‘அபய’’ முத்திரையும், முன் இடது கை “கடியவலம்பித” அமைப் பிலும், பின்னிரு கரங்களில் பிரயோகச் சக்கரமும், சங்கமும் ஏந்தியவாறு எழிலுற அமைக்கப்பட்டுள்ளனர்.

கிரீட மகுடம், காதுகளில் மகர குண்டலம், துல்லியமான கண்கள், நேர்த்தியான மூக்கு (சற்றே சிதைந்திருந்தாலும்), நன்கு செதுக்கப்பட்ட வளைந்த உதடுகள், தோள்களில் வாகுவளை, பொன் பூணூல், மார்பில் ஸ்தன சூத்திரம், இடுப்பில் பட்டாடை, முத்து வடம், கை வளைகள் என இவை அனைத்தும் நிச்சயமாக ஒவ்வொரு பார்வையாளரையும் கவர்ந்திழுக்கும்.ஒரே மாதிரியான இந்தச் சிற்பங்களில், ஒவ்வொரு சிற்பத்தின் ஆபரண அலங்காரங்களில் நுணுக்கமாக சிறு சிறு வேறுபாடுகளைக் காட்டியுள்ளது குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சம்.இந்த குடைவரை ஆலயத்துக்கு முன்புறமுள்ள மேடையின் பீடத்தில் யாளி, யானை, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் சிற்பவரிசை அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த திருமால் சிற்பங்களின் காலம் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக்கருதப் படுகிறது.முதலாம் குலோத்துங்க சோழனின் (பொ.யு.1070-1122) 45-வது ஆட்சி ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கல்வெட்டுகளில் இந்த திருமேற்கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படுவது பற்றிய குறிப்புக்கள் உள்ளன. மாறவர்மன் சுந்தர பாண்டியனின் (பொ.யு.1227) 12 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு, இந்த ஆலயத்தை ‘பதினெண்பூமி விண்ணகரம்’ என்று அழைக்கிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *