காசியில் 12 சூரிய கோவில்களின் அற்புதங்கள்

Loading

கங்கையை பூமிக்கு வரவழைத்தவர், பகீரதன். இவர் தன்னுடைய முன்னோர்கள் நற்கதி அடைவதற்காக ஆகாயத்தில் இருந்த கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். கங்கை பூமிக்கு வந்ததை அறிந்த சூரியன், இங்கு வந்து கங்கையை வழிபட்டார். அவர் வழிபட்ட லலிதாகாட் படித்துறை அருகில், கங்காதித்யர் என்ற சூரியக் கோவில் அமைந்துள்ளது.
காசியப முனிவரின் மனைவி விநதை, இரண்டு பிள்ளைகளை பிரசவித்தாள். முதல் பிள்ளை, அருணன். இரண்டாவது பிள்ளை கருடன். சூரிய பகவானை வழிபட்ட அருணன், அவரது தேரை செலுத்தும் சாரதியாகும் பேறு பெற்றார். காசி திரிலோசனர் கோவிலில், அருணன் வழிபாடு செய்த சூரிய பகவான் ‘அருணாதித்யர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

மன சஞ்சலம், துன்பத்தை தீர்த்து வைப்பவர் என்பதால் சூரியனை ‘லோலார்க்கர்’ என்று அழைப்பர். காசியிலுள்ள அதிசங்கமத்தில் இவருக்கு கோவில் உள்ளது. இங்குள்ள `லோலார்க்க குண்டம்’ என்னும் குளம் புகழ்மிக்கது.

தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்ற மன்னன், முனிவர்களின் ஆலோசனைப்படி சூரிய பகவானை வழிபட்டான். அவனுக்கு காட்சியளித்த சூரியன், ‘இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய் வராது’ என அருள்புரிந்தார். காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஜங்கம்பாடியில் சூரியனுக்கு கோவில் உள்ளது. இவருக்கு ‘விமலாதித்யர்’ என்று பெயர்.

சூரியனின் மகன் எமதர்மன் தன் சக்தியை அதிகரிக்க விரும்பி, சூரியக் கோவில் கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. ‘எமாதித்யர்’ என்னும் பெயரில் இங்கு அருளும் சூரியனுக்கு காசி சங்கடா காட்டில் கோவில் உள்ளது.

கருடன் தன் தாய் விநதையுடன் சூரியனை வழிபட்டு அளப்பரிய பலம் பெற்றார். அதன் விளைவாக விஷ்ணுவின் வாகனமாகும் பேறு கிடைத்தது. தாயும் மகனும் வழிபட்ட சூரிய பகவானை ‘சுஷோல்கா ஆதித்யர்’ என்று அழைக்கின்றனர். காசியிலுள்ள திரிலோசனர், காமேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இந்த சூரியனுக்கு சன்னிதி உள்ளது.

சூரியன் அளித்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரவுபதி அனைவருக்கும் அன்னமிட்டாள். அவள் வழிபட்ட சூரியக்கோவில் காசியிலுள்ள அட்சயபீடத்தில் உள்ளது. இங்குள்ள சூரியனுக்கு ‘திரவு பதிஆதித்யர்’ என்று பெயர்.

காசிக்கு வடக்கிலுள்ள ‘அலேம்புரா’ என்னும் இடத்தில் `உத்திர அர்க்க குண்டம்’ என்னும் சூரியதீர்த்தம் உள்ளது. `வக்ரியா குண்டம்’ என்றும் இதைக் கூறுவர். இந்த தலத்தில் ஒரு ஆடும், ஒரு பெண்ணும் தவமிருந்து சூரியனின் அருளைப் பெற்றனர். இங்குள்ள சுவாமிக்கு ‘உத்திர அர்க்கர்’ என்பது பெயர்.

காசியில் உள்ள வருணா சங்கமத்தில் சூரியன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக காசி காண்டம் கூறுகிறது. திருமாலின் அருளால் சூரியன் அமைத்த சிவலிங்கம் இது. இங்கு அருள்புரியும் சூரியன் ‘கேசவாதித்யர்’ எனப்படுகிறார்.

கிருஷ்ண அவதாரத்தின்போது, கிருஷ்ணருக்கு மகனாக பிறந்தவனின் பெயர் சாம்பன். இவன் ஒரு முறை தொழு நோய் பாதிப்புக்கு உள்ளானான். தனது மகனின் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணன், சூரியனை வழிபடும்படி மகனுக்கு அறிவுறுத்தினார். இதை யடுத்து காசிக்கு வந்த சாம்பன், சூரிய பகவானை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றான். அவன் வழிபட்ட சூரியனை, காசியில் ‘சாம்பாதித்யர்’ என்ற பெயரில் காண முடியும்.

விருத்தன் என்னும் வேதியர், சூரியனை வழிபட்டதால் முதுமை நீங்கி மீண்டும் இளமை அடைந்தார். விருத்தன் வழிபாடு செய்த ‘விருத்தாதித்யர்’ காசியிலுள்ள மீர்காட்டில் கோவில் கொண்டிருக்கிறார்.

கங்கைக்கரையில் உள்ள பஞ்ச கங்கா காட் அருகில் மயூகாதித்யர் என்னும் சூரியக்கோவில் உள்ளது. புராண காலத்தில் சூரியன் இங்கு கபஸ்தீஸ்வரர், மங்களகவுரி என்னும் பெயரில் சிவ-பார்வதியை பிரதிஷ்டை செய்து லட்சம் ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டார். மனம் இரங்கிய சிவன், சூரியனுக்கு ‘மயூகன்’ (என்றும் அழியாதவன்) என்று பெயர் சூட்டினார். காசிக்கு சென்றால், காசி விஸ்வநாதரை தரிசிப்பதோடு அங்குள்ள சூரியக் கோவில்களையும் வழிபட்டால் சகல நலமும் பெறலாம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *